மகளிருக்கான கட்டணமில்லா சேவைகளிலும் தனிகவனம்.. சிற்றுந்துகளுக்கும் சில உத்தரவுகள்…புதிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் அதிரடி

Author: Babu Lakshmanan
31 March 2022, 10:44 pm

சென்னை : போக்குவரத்துத்துறை அமைச்சர்‌ எஸ்‌.எஸ்‌.சிவசங்கர்‌‌, தமிழ்நாடு அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழகங்களின்‌ செயல்பாடுகள்‌ குறித்து தலைமைச்‌ செயலகத்தில்‌ ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சராக திரு.எஸ்‌.எஸ்‌.சிவசங்கர்‌ நேற்றைய தினம்‌ பொறுப்பேற்றுக்‌ கொண்டார்கள்‌. அதனைத்‌ தொடர்ந்து, இன்றைய தினம்‌ தலைமைச்‌ செயலகத்தில்‌. தமிழ்நாடு அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழகங்களின்‌ செயல்பாடுகள்‌ குறித்து போக்குவரத்துத்துறை முதன்மைச்‌ செயலாளர்‌ டாக்டர்‌ கே.கோபால்‌, அனைத்துப்‌ போக்குவரத்துக்‌ கழக மேலாண்‌ இயக்குநர்கள்‌, தனி அலுவலர்‌ மற்றும்‌ உயர்‌ அலுவலர்களுடன்‌ ஆலோசனை நடத்தினார்கள்‌.

இக்கூட்டத்தில்‌, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌, பொதுமக்கள்‌ பெரிதும்‌ சார்ந்துள்ள பொது போக்குவரத்தினை நிறைவாக அளித்திட வேண்டும்‌ என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தியுள்ளார்கள்‌. எனவே. அதற்கு ஏற்ப அனைவரும்‌ செயல்பட வேண்டும்‌ என அறிவுறுத்தினார்கள்‌.

பின்னர்‌, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌, பேருந்து வசதியே இல்லாத கிராமங்களை கண்டறிந்து மிக விரைவாக போக்குவரத்து வசதியை பொதுமக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ ஏற்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்‌ எனவும்‌, சென்னை மாநகரில்‌ சிற்றுந்துகள்‌ இயக்கவேண்டிய இடங்களை கண்டறிந்து தேவைக்கு ஏற்ப சிற்றுந்துகள்‌ இயக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்‌ எனவும்‌ அறிவுறுத்தினார்கள்‌.

மேலும்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ நடைமுறைப்படுத்தப்பட்ட பொன்னான திட்டமான, மகளிர்‌ கட்டணமில்லா பயண சேவையில்‌ எவ்வித குறைபாடுகளும்‌, விமர்சனங்களும்‌ இல்லாமல்‌ இத்திட்டத்தை தனிக்கவனம்‌ செலுத்தி மிகச்‌ சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுத்திட வேண்டும்‌ எனவும்‌, பேருந்து இயக்கத்தில்‌ பயணக்‌ கட்டண வருவாயை தவிர பிற வழிகளில்‌, அதாவது விளம்பரம்‌, தூதஞ்சல்‌, பார்சல்‌ சேவை மற்றும்‌ போக்குவரத்துக்‌ கழகங்களுக்கு சொந்தமான காலியாக உள்ள இடங்களை கண்டறிந்து அவற்றை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில்‌ மாற்றியமைத்து எவ்வாறு வருவாயினை பெருக்கிட வேண்டும்‌ என இனம்‌ கண்டு அவற்றை செயல்படுத்தி கழகத்தின்‌ வருவாயை மேம்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்‌ எனவும்‌, போக்குவரத்துக்‌ கழகங்களில்‌ பணிபுரியும்‌ தொழிலாளர்களின்‌ குறைகளை அவ்வப்போது கனிவுடன்‌ கேட்டறிந்து உடனுக்குடன்‌ தீர்வு காணப்பட வேண்டும்‌ எனவும்‌ அறிவுறுத்தினார்கள்‌.

அதனைத்‌ தொடர்ந்து. தகவல்‌ தொழில்நுட்பத்தை முழுவதுமாக பயன்படுத்தி போக்குவரத்துத்‌ துறையின்‌ செயல்பாடுகளை மேம்படுத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்‌ எனவும்‌, பேருந்துகளை நவீனமயமாக்கல்‌ மற்றும்‌ கிளை வளாகங்களின்‌ உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்த திட்டங்களை விரைந்து செயல்படுத்திட ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்‌ எனவும்‌ அறிவுறுத்தினார்கள்‌.

போக்குவரத்துத்துறை முதன்மைச்‌ செயலாளர்‌ அவர்கள்‌, போக்குவரத்துத்‌ துறையின்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ வரும்‌ காலங்களில்‌ செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள்‌ குறித்து விரிவாக போக்குவரத்துத்துறை அமைச்சர்‌ அவர்களிடம்‌ எடுத்துரைத்தார்கள்‌. குறிப்பாக. தகவல்‌ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பேருந்துகள்‌ இயக்கத்தை கண்காணித்து நெறிப்படுத்திட எடுக்கப்பட்டு வரும்‌ நடவடிக்கைகள்‌ குறித்து விளக்கினார்‌.

தனி செயலியினை பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்தும்‌, வரும்‌ காலங்களில்‌ செயல்படுத்தப்பட உள்ளது குறித்தும்‌, மகளிரின்‌ பேருந்து பயணப்‌ பாதுகாப்பினைகண்காணித்திடும்‌ வகையில்‌, “நிர்பயா” நிதி மூலம்‌ மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகப்‌ பேருந்துகள்‌ மற்றும்‌ பேருந்து நிலையங்களில்‌ கேமராக்கள்‌ பொருத்தும்‌ திட்டத்தின்‌ செயலாக்கம்‌ குறித்தும்‌ தெரிவித்தார்கள்‌.

மேலும்‌, போக்குவரத்துக்‌ கழகங்களின்‌ இயக்க செயல்பாடுகசை கண்காணிக்கும்‌ வகையில்‌, சிசிடிவி கேமராவை நிறுவிட நடவடிக்கை எடுப்பது குறித்து விவரித்தார்‌. அத்தோடு உலக வங்கி நிதி உதவியுடன்‌ மாநகர்‌ போக்குவரத்து கழகத்தில்‌ செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள்‌ குறித்தும்‌, தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம்‌ மூலமாக மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழக கிளை வளாகங்களின்‌ உட்கட்டமைப்பை மேம்படுத்தி, அதன்‌ மூலம்‌ இதர வருவாயை ஈட்டுவது குறித்து எடுக்கப்பட்டு வரும்‌ நடவடிக்கைகள்‌ குறித்தும்‌ விரிவாக எடுத்துரைத்தார்‌.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 1265

    0

    0