ஒரு டிக்கெட் ரூ.3,000மா… திருப்பிக் கொடுக்க சொல்றேன் சார்… தனியார் பேருந்தில் அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு!!
Author: Babu Lakshmanan14 April 2022, 9:25 am
சென்னை : தொடர் விடுமுறை நாட்களையொட்டி சொந்த ஊர்களுக்கு திரும்பும் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா..? என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.
தமிழ்ப்புத்தாண்டு, ஈஸ்டர் என அடுத்தடுத்து 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால், சென்னையில் இருக்கும் வெளியூர்வாசிகள், தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதற்காக, அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தாலும், தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சென்னை தனியார் ஆம்னி பேருந்துகளில் நேற்று இரவு திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பேருந்தில் இருந்த பயணிகளிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என கேட்டறிந்தார். அந்த சமயம் ஒரு சில பயணிகள் வழக்கத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
உடனே அமைச்சர் சிவசங்கர் கூடதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் உங்களுக்கு திருப்பித் தரப்படும் என கூறினார். பிறகு தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் பயணிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி கொடுக்கும்படி உத்தரவிட்டார்.