அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது : ஆளுநர் தமிழிசை ட்விஸ்ட் !

Author: Udayachandran RadhaKrishnan
10 November 2023, 7:11 pm

அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது : ஆளுநர் தமிழிசை ட்விஸ்ட் !

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழக அரசிடமிருந்து உங்களுக்கு தீபாவளி வாழ்த்து கிடைக்காது. அதனால் முதலாவதாக சகோதரியாக தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தென்பகுதிக்கு வருவதில் தாய் வீட்டிற்கு வருவது போல் மகிழ்ச்சியாக உள்ளது.

சாதனை படைத்துக் கொண்டிருக்கின்ற தென்தமிழகம் தற்போது சாதி பிரச்சனையால் மிகக் கொடூரமாக பாதிக்கப்பட்டு கொண்டிருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. ஏனென்றால் தச்சநல்லூரில் இரண்டு இளைஞர்களை சாதியத்தை சுட்டிக்காட்டி சிறுநீர் கழிக்கப்பட்டது மிக வேதனையாக இருக்கிறது.

தமிழகத்தில் சாதிய வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து, நாங்குநேரி நிகழ்வு, வேங்கை வயலில் குடிநீரில் மலம் கழிப்பு, மனிதர்கள் மீது சிறுநீர் கழிப்பது ஆகியவை கவலை அடிக்கக்கூடியது. இந்தப் பிரச்சனைகளில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால் நீட் தேர்வு தான் நாட்டின் தலையாய பிரச்சனை என்பது போல அதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் நீட் தேர்வுக்கு நன்றாகப் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அது பிரச்சனை என்றால் சட்டரீதியாக அணுகுங்கள். எல்லாவற்றையும் விட்டு விட்டு இதுதான் பிரச்சினை என்று அதை பின்தொடர்ந்து வருகிறார்கள். இது தவறு.” என்றார்.

சனாதான தர்மம் பற்றிய பேச்சுக்காக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதுபற்றி பேசிய அமைச்சர் உதயநிதி, என்ன செய்தாலும் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் எனக் கூறியது பற்றிப் பேசிய தமிழிசை, “உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசியது குறித்து மன்னிப்பே கேட்க மாட்டேன். நான் சொன்னது சொன்னதுதான் என்று கூறுகிறார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டியது நிறைய இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பெண்களைப் பற்றி அவதூறாக பேசியது குறித்து பேசிய தமிழிசை, “முதலமைச்சர் நிதிஷ்குமார் பேச்சு மிக மிக கண்டிக்கத்தக்கது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பணம் வாங்கிக்கொண்டு கேள்வி கேட்கிறார்கள் என்ற செய்தி, எதிரில் உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஒவ்வொன்றாக மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய காலகட்டம்” எனத் தெரிவித்துள்ளார்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!