மீண்டும் அல்வா கிண்டியிருக்காங்க ; இனி எழவே முடியாத அளவுக்கு பாசிஸ்ட்டுகளை மக்கள் வீழ்த்துவது உறுதி ; அமைச்சர் உதயநிதி

Author: Babu Lakshmanan
1 February 2024, 8:55 pm

இடைக்கால பட்ஜெட்டில் கைவிரித்த பாசிஸ்ட்டுகளை, இனி எக்காலத்துக்கும் எழ முடியாத அளவுக்கு இந்திய மக்கள் வீழ்த்துவது உறுதி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது நாளில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் பல்வேறு சாதனைகள் மற்றும் செயல்பாடுகளை பட்டியலிட்ட அவர், புதிய திட்டங்களையும் அறிவித்தார்.

மேலும், இறக்குமதி வரி உள்பட நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 7 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் வருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை என்பது தொடரும் என்றும், வரும் ஆண்டில் நிதி பற்றாக்குறையானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, பல்வேறு அறிவிப்புகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க – பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த – மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க எந்த திட்டங்களையும் அறிவிக்காமல், 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வல்லரசாவதற்கான இலக்கை தள்ளி வைத்துக் கொண்டே போவது மட்டும் தான் பாசிஸ்ட்டுகளின் சாதனை. இடைக்கால பட்ஜெட்டில் கைவிரித்த பாசிஸ்ட்டுகளை, இனி எக்காலத்துக்கும் எழ முடியாத அளவுக்கு இந்திய மக்கள் வீழ்த்துவது உறுதி, என தெரிவித்துள்ளார்.

  • Premgi Amaren marriage newsநடிகர் பிரேம்ஜிக்கு இப்படி ஒரு பிரச்சனையா..மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்..!
  • Views: - 371

    0

    0