அமைச்சர் பொன்முடி வீட்டில் எதுவுமே சிக்கவில்லையா…?அமைச்சர் உதயநிதி புது குண்டு!

Author: Babu Lakshmanan
20 July 2023, 9:59 pm
Quick Share

அமைச்சர் உதயநிதி இப்போதெல்லாம் அரசியல் மேடைகளில், சினிமாவில்
வீர வசனம் போல் எதுகை மோனையுடன் பேசுவது சர்வ சாதாரண ஒன்றாகிவிட்டது.
ஆனால் அதுவே போன வேகத்தில் ‘பூமராங்’ போல திரும்பி வந்து அவரையே போட்டு தாக்கியும் விடுகிறது.

தான் அமைச்சர் என்பதாலேயோ, அல்லது திமுகவின் அடுத்த தலைவர் நாம்தான், கட்சியின் இளைஞர் அணி முதல் அனைத்து தரப்பினரின் ஆதரவும் நமக்குத்தான் இருக்கிறது என்ற நினைப்புடனோ சமீபகாலமாக அவர் பொங்குவது தமிழக அரசியல் களத்தில் கேலிப் பொருளாகவே பார்க்கப்படுகிறது. அவர் இப்படி பேசுவதை திமுகவினரைத் தவிர மற்ற கட்சியினர் யாரும் சீரியஸாக எடுத்துக்கொண்டது போலவும் தெரியவில்லை.

அதேநேரம் திமுக அமைச்சர்களில் செந்தில் பாலாஜி, பொன்முடி மற்றும் கௌதம சிகாமணி எம்பி மூவரும் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட லா.கூடலூரில் நடந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கோபம் கொப்பளிக்க பேசினார்.

கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோதே இதுபோல ஒரு முறை அவர் கொதித்தெழுந்து இருந்தாலும் கூட இப்போது மீண்டும் அதே பாணியில் ஆக்ரோஷம் காட்டி இருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

உதயநிதி அப்படி என்னதான் பேசினார்?….

“பாஜகவில் பல அணிகள் இருக்கின்றன. CBI அணி, EDஅணி, IT அணி. இந்த அணிகளை தேர்தல் நேரத்தில் அவர்கள் களமிறக்கி விடுவார்கள். தற்போது அந்த அணிகள் களம் இறங்கியுள்ளன.

தமிழக ஆளுநர் ரவி ஊழல் ஒழிப்பு பற்றி பேசி வருகிறார். ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மட்டும் அவர் ஏன் அனுமதி மறுக்கிறார்?… அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், புதுக்கோட்டை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா இவர்கள் மீதெல்லாம் முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி அவர்களது வீடுகளில் சோதனையும் செய்தது.

பாஜக அப்படி மிரட்டித்தான் அதிமுகவை அவர்களது அடிமையாக்கியது. அதேபோல் திமுகவையும் தங்களது அடிமையாக்க நினைக்கிறது. மோடி அல்ல, திமுகவை யாராலும் அடிமைப்படுத்த முடியாது. உங்களுடைய பம்மாத்து வேலை திமுகவிடம் ஒருபோதும் நடக்காது.

சென்ற மாதம் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினார்கள். 2 நாட்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தினார்கள். எங்கும் எதுவும் சிக்கவில்லை.

பாஜக தலைவர் பேட்டி அளிக்கிறார், அடுத்த ரெய்டு உதயநிதி வீட்டில் நடக்கப் போகிறது, என்கிறார். வாருங்கள், எனது முகவரி கொடுக்கிறேன். நான் கலைஞர் பேரன், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மகன். நான் மோடிக்கும் பயப்பட மாட்டேன். EDக்கும் பயப்பட மாட்டேன். மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. நான் சவால் விடுகிறேன், எப்போது வேண்டுமானாலும் வாருங்கள், சொல்லிவிட்டு வாருங்கள். நான் வீட்டிலேயே இருக்கிறேன். திமுகவின் ஒரு கிளைச் செயலாளரை கூட நீங்கள் பயமுறுத்த முடியாது”என்று போட்டு தாக்கியிருக்கிறார்.

இன்றைய அமைச்சரான உதயநிதி 2017-ம் ஆண்டு முதலே அதிமுகவை பாஜக அடிமையாக வைத்திருக்கிறது என்று பேசி வருவது வேடிக்கையாக இருக்கிறது. ஏனென்றால் அந்த ஆண்டே அதிமுக இரண்டாக பிளவுபட்டு சட்டப்பேரவை தேர்தல் நடந்திருந்தால் திமுக ஆட்சியை கைப்பற்றி இருக்கும்.

ஆனால் அப்படி எதுவும் நடந்து விடாமல் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தடுத்துவிட்டனர். இந்தக் கோபத்தில்தான் திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, ஆ ராசா என அத்தனை பேரும் வரிசைகட்டி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை மிகக் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர் என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்று.

2017ல் தமிழகத்தில் தேர்தல் நடந்திருந்தால், 2022ம் ஆண்டு இன்னொரு தேர்தல் நடத்தப்பட்டு அதிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இடையில் பாஜக குறுக்கிட்டதால், திமுகவின் இந்த எண்ணம் ஈடேறாமல் போய்விட்டது. மத்திய பாஜக அரசை திமுகவினர் தொடர்ந்து அட்டாக் செய்வதற்கு
இது இன்னொரு முக்கிய காரணம்.

“அதேநேரம் யார், யாருக்கு அடிமையாக இருந்தார்கள்? என்று பேசும்போதெல்லாம் அமைச்சர் உதயநிதி திமுகவின் பழைய வரலாறுகளை அடியோடு மறந்துவிடுகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை”என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அதற்கான காரணங்களை அவர்கள் கூறுவதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகவே உள்ளது.

“மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த மிசா சட்டத்தையே எதிர்த்து போராடியவர்கள் நாங்கள் என்று இதுநாள் வரை வீர முழக்கமிட்டு வரும் திமுகதான் 1980ம் ஆண்டு நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று வரவேற்றது.

தமிழகத்தில் அப்போது நடந்த எம்ஜிஆரின் அதிமுக ஆட்சி இந்திரா காந்தியால் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டபோது எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விடவேண்டும் என்பதற்காக காங்கிரசுக்கு 118 தொகுதிகளை தானமாக கொடுத்து விட்டு அதன் அடிமை போல திமுக 116 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட ஒப்புக்கொண்டது.

இந்த அடிமைத்தனத்தால் நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி கிடைத்தும் கூட சட்டப்பேரவை தேர்தலில் எம்ஜிஆரிடம் திமுக படுதோல்வியே கண்டது. காங்கிரசிடம் திமுக அடிமையாக பணிந்துபோன இன்னொரு நிகழ்வும் கருணாநிதி உயிருடன் இருந்த காலத்தில்தான் நடந்தது.

2011 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் இடையே நடந்த தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை மிக மிக கேலிக்கூத்தாக அமைந்திருந்தது. காங்கிரஸ் தங்களுக்கு 63 தொகுதிகளை ஒதுக்கியே ஆக வேண்டும் என்று பிடிவாதம் காட்டியது. அதற்கு கருணாநிதி மறுப்பு தெரிவித்தார்.

ஆனால் காங்கிரஸோ அதிரடியாக எங்கு தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடந்ததோ அதே அண்ணா அறிவாலயத்தின் மாடியில் உள்ள கலைஞர் டிவி அலுவலகத்துக்குள் புகுந்து சிபிஐ, ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக ரெய்டு நடத்தியது.

அப்போது மாடியில் ரெய்டு, கீழே தொகுதி பேச்சுவார்த்தையா? என்று திமுகவை ஏளனமாக பேசாதவர்களே கிடையாது. இறுதியில் இந்திரா காந்தி 1980ல் திமுகவை அடிபணியச் செய்ததுபோல, 2011ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மிரட்டல் அரசியலில் ஈடுபட்டு 63 தொகுதிகளையும் அப்படியே வாங்கிவிட்டார்.

இந்தத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவிடம் திமுக- காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி கண்டது. முதல் முறையாக தமிழக அரசியல் வரலாற்றில் திமுகவால் எதிர்க்கட்சியாக கூட உட்கார முடியாமலும் போனது.

1980ல் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரசின் அடிமையாக திமுக மாறிய நேரத்தில் உதயநிதி சிறுவனாக இருந்திருப்பார். அதனால் அன்றைய நிகழ்வுகள் முழுமையாக அவருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால் 2011ல் அவர் இளைஞனாக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். அதனால் இரண்டாவது முறையாக காங்கிரஸிடம் மண்டியிட்ட அடிமை வரலாறு அவருக்கு நிச்சயம் தெரிந்தே இருக்கும்.

எனவே திமுகவின் அடுத்த தலைவர், பட்டத்து இளவரசர் என்று வர்ணிக்கப்படும் உதயநிதி தனது கட்சியின் பழைய வரலாறுகளையும் கொஞ்சம்
புரட்டிப் பார்க்கவேண்டும்.

அது மட்டுமல்ல 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது தாராபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து, “மோடி கொடுத்த நெருக்கடி காரணமாகத்தான் சுஷ்மா சுவராஜும், அருண் ஜெட்லியும் மரணம் அடைந்தனர்” என்று போட்டுத் தாக்கினார். ஆனால் இதற்கு சுஷ்மா மற்றும் ஜெட்லி மகள்கள் இருவரும் உடனடியாக கடும் கண்டனம் தெரிவித்தனர்.

“நீங்கள் சொன்ன அனைத்துமே பொய்”என்று அவர்கள் மறுத்தபோது,
“நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் பேசியதில் சில வரிகளை மட்டுமே எடுத்துக்கொண்டு அதை பெரிதுபடுத்திவிட்டனர்” என்று உதயநிதி நைசாக நழுவிக் கொண்டார்.

இப்போது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இரண்டு அமைச்சர்களின் வீடுகளிலும் எதுவும் சிக்கவில்லை என்று உதயநிதி எப்படி கூறுகிறார் என்று தெரியவில்லை. ஏனென்றால் பொன்முடியின் வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும், 13 லட்ச ரூபாய் மதிப்பிலான இங்கிலாந்து பவுண்டு கரன்சியும் பிடிபட்டதை இவையெல்லாம் அற்பத்தொகை என்று கருதுகிறாரா என்பதும் புரியவில்லை.

முதலில் ஆவேசமாக பேசுவது, எதிர்முனையில் கடும் தாக்குதல் நடத்தப்பட்டால் பதுங்கிக் கொள்வது என்று அவ்வப்போது சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் உதயநிதி பாஜக, அதிமுக பற்றி நக்கலாக பேசுவது திமுக மீது மக்களுக்கு நிச்சயம் நல்லெண்ணத்தை உருவாக்காது”என்று அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

Views: - 266

0

0