P.E.T. பீரியடை கடன் வாங்காதீங்க… விளையாட்டாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!
Author: Babu Lakshmanan20 June 2023, 10:10 am
விளையாட்டு வீரர்கள் எதற்கும் தயாராக, எதற்கும் தயங்காமல், உங்கள் விளையாட்டுத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் கோப்பை போட்டியில் தஞ்சாவூர் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. விழாவில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் களம் நமதே என்ற வீடியோ வெளியிடப்பட்டது. தொடர்ந்து முதலமைச்சர் கோப்பைக்கான லோகோவும் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில் முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது:- பல எழுத்தாளர்களையும், அரசியல் தலைவர்களையும் உருவாக்கிய தஞ்சை மண் இனிவரும் காலங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களையும் உருவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பள்ளிகளில் கணிதம் அறிவியல் ஆசிரியர்கள் பீடி பிரீடுகளை கடன் வாங்காதீர்கள். உங்கள் வகுப்புகளை வேண்டுமென்றால் கடன் வழங்கி மாணவர்களை விளையாட அனுமதிக்க வேண்டும். இது பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்.
எதற்கும் தயாராக எதற்கும் தயங்காமல் உங்கள் விளையாட்டுத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவில், தேசிய அளவில், சர்வதேச அளவில் ஆட்ட களங்கள் காத்திருக்கின்றன, எனக் கூறினார்.
நிகழ்ச்சியை தொடர்ந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோயை துல்லியமாக கண்டறியும் 10 கோடி மதிப்பிலான PET CT கருவியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்து 47 கோடி ரூபாய் மதிப்பிலான ஒருங்கிணைந்த புதிய புற்றுநோய் சிகிச்சை மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.