48 மணிநேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டே ஆகனும்… அண்ணாமலைக்கு கெடு விதித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ; கமலாலயம் பறந்த நோட்டீஸ்!!

Author: Babu Lakshmanan
19 April 2023, 5:58 pm

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 14ம் தேதி அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட திமுகவின் முக்கிய புள்ளிகளின் சொத்து மதிப்பை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். சொத்துப்பட்டியல் வெளியானதை தொடர்ந்து சமூகவலைதளங்களில் கடும் விவாதம் நடைபெற்றது.

இதனிடையே, இந்த சொத்துப்பட்டியல் குறித்து கருத்து தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக் கூறினார். மேலும், திமுகவின் பல்வேறு தலைவர்கள் இது குறித்து கருத்துக்களை கூறி வந்த நிலையில், திமுக சார்பில் ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

திமுகவின் இந்த நடவடிக்கைக்கு அண்ணாமலையும் பதிலடி கொடுக்கும் விதமாக, 500 கோடியே ஒரு ரூபாய் கேட்டு பதில் நோட்டீஸ் அனுப்பினார். மேலும், மன்னிப்பு கேட்க முடியாது என்றும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், அதனை சந்திக்க தயார் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தன் மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் நோட்டீஸ் அனுப்பியது மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நோட்டீஸில், 48 மணிநேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையேல் ரூ.50 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்ணாமலை சொத்துப்பட்டியலை வெளியிட்டதை தொடர்ந்து திமுக மற்றும் பாஜக தரப்பில் மாறி மாறி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  • Ajith Kumar Team Racing Challenges துபாய் ரேஸில் பல திக் திக் சவால்ககளை எதிர்கொள்ள போகும் அஜித் குழுவினர்… 24 மணி நேரம் எப்படிங்க..!
  • Views: - 316

    0

    0