‘நாலு நாலு பேரா வாங்க’… உதயநிதி கூட்டத்தில் பெண்களுக்கு பணப்பட்டு வாடா ; வெளியான வீடியோவால் அதிர்ச்சி…!!!

Author: Babu Lakshmanan
25 March 2024, 9:07 am

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க கட்சி நிர்வாகிகள் மூலம் அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு வெளிப்படையாக நடைபெற்ற பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின், திமுக வேட்பாளரை ஆதரித்து இரண்டு நாட்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், நேற்று காலை தேனி பங்களாமேட்டு பகுதியில் இரண்டாவது நாளாக திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து திறந்த வேனில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் பிரச்சார நிகழ்ச்சிக்காக தேனி நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து திமுக சார்பில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை பிரச்சார கூட்டத்திற்கு திமுக நிர்வாகிகள் அழைத்து வந்திருந்தனர்.

பிரச்சார நிகழ்ச்சிக்கு உதயநிதி ஸ்டாலின் வருவதற்கு முன்பே, பங்களா மேட்டில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க அழைத்துவரப்பட்ட பெண்களுக்கு வெளிப்படையாகவே பணப்பட்டுவாடா மற்றும் டோக்கன்களை திமுக நிர்வாகிகள் விநியோகித்தனர்.

நான்கு நான்கு பெண்களாக வரவழைக்கப்பட்டு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.

மேலும், ஒன்றிய நிர்வாகிகள் மூலம் அச்சடிக்கப்பட்ட டோக்கன்கள் வழங்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக திமுகவினர் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

  • Ajith Vidamuyarchi Trailer Release Update விடாமுயற்சி ட்ரைலர் ரெடி : அப்போ ரிலீஸ் தேதி…இருங்க பாய்..நாளைக்கு ஒரு வெயிட்டான சம்பவம் இருக்கு..!