‘இவங்களுக்கு பெரியார் வழிதான் சரி’… மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் அவர்களே!! நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி

Author: Babu Lakshmanan
22 December 2023, 9:45 pm

அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

வெள்ள நிவாரணம் தொகை தொடர்பாக பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவங்க அப்பன் வீட்டு காசை கேட்டதை போல செயல்படுவதாகவும், எங்கள் வரிப்பணத்தைத் தான் கேட்பதாக கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜகவினரும் தக்க பதிலடி கொடுத்து வந்தனர்.

அமைச்சர் உதயநிதியின் இந்தப் பேச்சு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- அவங்க பாஷை எப்போதும் அப்படிதான். இப்படியெல்லாம் பேசுறவங்க அவங்க அப்பன் வீட்டு சொத்தை வைத்தா இன்னிக்கு பதவியில் அனுபவிக்கிறாரா?-ன்னு கேட்க முடியுமா? மக்கள் பிரதிநிதிக்கு உரிய மரியாதையை கொடுக்கிறோம். அப்பன் வீடு என்ற பேச்சு எல்லாம் அரசியலில் நல்லது இல்லை.

அவருடைய தாத்தா எப்படிப்பட்ட அறிஞர். பதவிக்கு ஏற்ற வார்த்தை நாக்கில் அளந்து வரணும். மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது முன் தவணையாக டிச.12-ந்தேதி ரூ.900 கோடி மத்திய அரசு கொடுத்தது. அது எங்க அப்பன் சொத்து, உங்க அப்பன் சொத்துன்னு சொல்ல மாட்டேன். பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும், எனக் கூறினார்.

இந்த நிலையில், அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் அவர் விடுத்துள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள்.

சிலரிடம் அண்ணாவைப் போல, சிலரிடம் கலைஞரைப் போல, சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது. வெள்ள பாதிப்புக்காக கழக அரசு நிவாரண நிதி கேட்டால், “நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ” என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்” என்று கூறினேன்.

என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன். ஆனாலும், மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள்.

மீண்டும் சொல்கிறேன் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாரமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம்.

வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம். நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 427

    1

    0