சனாதனத்தை அழிப்பது உறுதி… முன்பை விட இப்ப உறுதியாக இருக்கேன்.. எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க தயார் ; உதயநிதி ஸ்டாலின்..!!

Author: Babu Lakshmanan
4 September 2023, 5:47 pm

சனாதனத்தை அழிப்பதில் முன்பை விட இப்போது உறுதியாக இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- சாமி கும்பிடக்கூடாது என்று நாங்கள் சொல்லவே இல்லை. ஜாதியை வைத்து கொண்டு நீங்கள் எல்லோரையும் கோவிலுக்குள் விட்டீர்களா? அதற்கு நாங்கள் சட்ட போராட்டம் நடத்தினோம்.அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று நீங்கள் நினைத்தீர்களா?.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று நான் கூறினேன். தற்போது அதைவிட அதிக உறுதியுடன் உள்ளேன். எத்தனை வழக்குகள் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளேன். நான் பேசாத வார்த்தைகளை அவர்கள் கூறுகிறார்கள். சமூக வலைதளங்களில் நான் பேசிய காணொளிகள் உள்ளது. நான் பேசியதை மாற்றி சூழ்ச்சி செய்கிறார்கள்.

காங்கிரஸ் முக்த்பாரத் என பிரதமர் மோடி கூறுகிறார். அதற்காக காங்கிரசில் உள்ளவர்களை எல்லாம் கொல்ல முடியுமா? அவர் அந்த கொள்கையைத்தான் எதிர்க்கிறார். அது இனப்படுகொலை என்றால் நான் பேசியதும் இனப்படுகொலை தான்.

சனாதனம் என்பது நிலையானது, மாற்ற முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு காலத்தில் பெண்கள் படிக்கக்கூடாது, வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றார்கள். இப்போது பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து சாதனை படைத்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு காலத்தில் கணவன் இறந்தால் உடன்கட்டை ஏற வேண்டும் என்றார்கள். ஆனால் தற்போது கிடையாது,
அது மாற்றப்பட்டுவிட்டது.

பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்றார்கள். அதெல்லாம் இப்போது பின்பற்றுகிறோமா..? மக்களுக்கான உரிமை ஒவ்வொரு காலத்திலும் பெற்றுத் தரப்பட்டு கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிடம் அதைத்தான் நான் பேசினேன். திமுக தொடங்கப்பட்டது சமூக நீதிக்காக தான். எந்த மதத்திற்கு எதிராகவும் நான் பேசவில்லை, மதத்திற்குள் இருக்கக்கூடிய ஜாதி பாகுபாடுகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் திமுக பேசுகிறது, எனக் கூறினார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!