தமிழ்நாட்டை வென்று விடலாம் என சிலருக்கு நினைப்பு… எந்த மாநிலத்தில் வென்றாலும் தமிழகத்தில் வெல்ல முடியாது ; அமைச்சர் உதயநிதி!!
Author: Babu Lakshmanan9 September 2023, 5:14 pm
தமிழ்நாட்டை வெல்லலாம் என சிலர் நினைக்கிறார்கள் என்றும், இந்திய ஒன்றியத்தில் எந்த மாநிலத்தில் வென்றாலும் தமிழகத்தில் வெல்ல முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
சென்னை இராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி அரங்கில் தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. அமைச்சர்கள் துரை முருகன், உதயநிதி ஸ்டாலின், கே.என் நேரு, சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைப்பு செயலாளர் மற்றும் துணை அமைப்புச் செயலாளர்கள் என அரங்கம் நிறைந்து காணப்பட்டது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது :- தயாநிதி மாறன் கூறியது போல. எனக்கும் இந்த அணிக்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு. என் பிறந்தநாள் அன்றுதான். இந்த அணிக்கும் பிறந்த நாள். தொடங்கப்பட்ட 9 மாதங்களில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி இருக்கிறார்கள் என்றால், அது உங்களுடைய துடிப்பான செயல்பாடு. இளைஞர் அணி பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு நீங்கள் அனைவரும் செயலாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.
விளையாட்டு மேம்பாட்டு அணியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இளைஞர் அணி நிகழ்ச்சிக்கு அடுத்ததாக விளையாட்டு மேம்பாட்டு அணி நிகழ்ச்சியில்தான் நான் அதிகமாக பங்கேற்று இருக்கிறேன். இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெற இருக்கிறது முதற்கட்டமாக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக மாநாட்டு நிதி 10 லட்சம் கொடுத்து இருக்கிறார்கள். தயாநிதி மாறன் துடிப்பானவர் அதே போல விளையாட்டு மேம்பாட்டு அணியில் இருக்கக்கூடிய நீங்களும் துடிப்பானவர்கள். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் நகைச்சுவையாக குறிப்பிட்டேன், செழிப்பான அணி, வளமான அணி என்று செல்வத்தில் மட்டுமல்ல, கொள்கைகளும், நீங்கள் வலிமையான செழிப்பான அணியாக உருவாக வேண்டும். விளையாட்டு மேம்பாட்டு அணி என்பது மிக முக்கியமான அணி. தமிழ்நாட்டில் இளைஞர்களை வேகமாக சென்றடைய கூடிய அணி, எதுவென்றால் அது விளையாட்டு மேம்பாட்டு அணி தான். விளையாட்டு என்பது நம் திராவிட இயக்க கொள்கை போல அனைவருக்கும் பொதுவானதாகும்.
விளையாட்டையும், நம் கழகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் விளையாட்டின் மீது எவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதேபோல, நமது தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டு அதிக ஈடுபாடு உடையவர். நீண்ட தூரம் ஓடினால்தான் அதிக உயரம் தாண்ட முடியும் என்று அரசியலையும். உயரம் தாண்டுதல் விளையாட்டோடு தொடர்புப்படுத்தி பேசியவர் கலைஞர்.
முன்பெல்லாம் நான் சுற்றுப்பயணம் சென்றால் மக்கள் வேலை வேண்டும், மருத்துவம் வசதி வேண்டும், கல்வி உதவி வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் மைதானம் வேண்டும், உடற்பயிற்சி கூட வேண்டும், விளையாட்டு உபகரணங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள். அந்த அளவிற்கு விளையாட்டு மீதான ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது.
கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட், தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம், மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஸ்டேடியம், விளையாட்டு நகரம் என்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, நமது கழக அரசு தொடங்கியிருக்கிறது. தொடர்ச்சியாக பன்னாட்டு போட்டிகளை கழக அரசு வெற்றிகரமாக நடத்தி வருகிறது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடத்தி முடித்தோம்.
முதலமைச்சரின் அறிவுறுத்தின்படி, பொருளாதாரத்தில் பின் தங்கிய வீரர், வீராங்கனைகளுக்கு உதவும் வகையில் பவர் ஆஃப் சாம்பியன்ஸ் அறக்கட்டளை உருவாக்கியுள்ளோம். 20 வருட கோரிக்கையாக இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கழக அரசு நிறைவேற்றிக் காட்டி இருக்கிறது.
அரசு மட்டுமல்ல நீங்களும் ஏழை, எளிய வீரர், வீராங்கணைகளை கண்டறிந்து உதவிட வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒவ்வொரு அணியும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தலைமை கழகம் கூறியிருக்கிறது. அதன்படி, விளையாட்டு மேம்பாட்டு அணியும், கலைஞர் ஜோதி ஓட்டம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்த வேண்டும்.
கிராம ஒன்றிய அளவுகளில் நீங்கள் போட்டிகளை நடத்த வேண்டும். போட்டிகளை வெறும் போட்டிகளாக பார்க்காமல் கழகத்தின் கொள்கைகளை கொண்டு சேர்க்கும் வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டை வெல்லலாம் என சிலர் நினைக்கிறார்கள். இந்திய ஒன்றியத்தில் எந்த மாநிலத்தில் வென்றாலும் தமிழகத்தில் வெல்ல முடியாது. அதற்கு காரணம் திமுகவும் திமுகவை வழிநடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார், கலைஞர், அண்ணா, பேராசிரியர் போன்ற பயிற்சியாளர்களால் நாம் வழிநடத்தப்பட்டுள்ளோம். அவர்கள் அனைவரும் நாம் எப்போது எப்படி செயல்பட வேண்டும் என நமக்கு கற்றுக் கொடுத்துள்ளனர், என்றார்.
தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது :- நமது இயக்கத்தில் இளைஞர் அணி, தொழிலாளர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி என 23 அணிகள் உள்ளது , 23 அணிகளிலும் பெறும் போட்டியாக இருப்பது இளைஞர் அணிக்கு பிறகு பொறுப்புக்கு வரவேண்டும் என விரும்புகிற அணி, இந்த விளையாட்டு மேம்பாட்டு அணியாக தான் இருக்க முடியும். இன்றைக்கு 500 க்கு மேற்பட்டோர் விளையாட்டு மேம்பாட்டு அணியில் மாவட்ட அமைப்பாளாகவும், துணை அமைப்பாளராகவும் பொறுப்பேற்று இங்கு வருகை அளித்து உள்ளனர்.
மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் தங்களை மேலும் health ambassadors என்று சொல்லி கொள்ளலாம். தமிழகத்தின் இளைஞர்களுக்கு விளையாட்டுகளின் மூலம் கிடைக்கும் பலன்களை வெளிப்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ambassadors என்று சொல்லக்கூடிய வகையில், உங்களது பொறுப்புகள் உள்ளது என்பதை நான் உணருகிறேன்.
அணி உருவாகி அனைவரும் பொறுப்பேற்ற குறிகிய காலகட்டத்திலேயே இத்தனை மாவட்டங்களில் இத்தனை போட்டிகள் நடைபெறுகின்றன. இது இந்த அணிக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வெற்றி. விளையாட்டு அணியின் செயலாளர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற சிறய காலகட்டத்தில் இந்த துறையை இந்த அளவிற்கு முன்னேற்றி வருகிறார் என்பதை உலகம் முழுவதும் இருக்கும் இளைஞர்கள் அனைவரும் உற்று நோக்கி இருக்கின்றன.
உலக நாடுகள் போற்றும் விதத்தில் தமிழகத்தின் விளையாட்டு துறை உள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளராக இருக்கும் தருணத்தில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை அமைப்பில் இணைத்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, 15-30 வயதில் உள்ள இளைஞர்கள் ஒரு 2 கோடி நபர்களுக்கு மிக சிறந்த வழிகாட்டிய இருக்கின்றார், என்றார்.
தொடர்ந்து, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி கூறியதாவது :- திராவிட கழகம் தொடங்கிய பொழுது மாணவர்கள் தான் கழகத்தின் முதுகெலும்பாக இருந்தார்கள். பின்னர் காலகட்டம் மாற்றத்தின் காரணமாக மாணவர்கள் வேறு பக்கம் சென்றார்கள். அதிலிருந்து மீண்டும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் இழுப்பதற்கு தலைவரால் ( ஸ்டாலின்) உருவாக்கப்பட்டது தான் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி.
இன்று காலை வரை பொறுப்பாளர்களை நியமித்துக் கொண்டே இருக்கிறோம். காரணம் இளைஞர் அணியில் சேர்ந்தது உதயநிதியை பார்க்க வேண்டும் என்று அவர்களுடைய எண்ணம் தான். தமிழகம் மட்டுமல்ல உலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் உதயநிதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். செஸ் முதல் ஹாக்கி வரை உலக அரங்கில் தமிழகத்தை நிலை நிறுத்துகிறார் உதயநிதி.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஏதாவது துருப்பு கிடைக்குமா..? திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தி விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த இடத்தில் நாங்கள் யார் மனதையும் புண்படுத்தவில்லை என்று கலைஞர் சொன்னதை நினைவு கூறுகிறேன். 2004 ஆம் ஆண்டு தேர்தலின் பொழுது கலைஞர் ஆட்சிக்கு வந்தால், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க வழிவகை செய்கிறோம் என்று கூறினார். அதன்படி தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்கிறது.
ஆனால், அத்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டியோ அதனை எதிர்க்கிறார். நானும் டிஆர் பாலு அப்போதைய அமைச்சர்கள் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஜெயபால் ரெட்டி இடம் கேட்ட பொழுது .சொன்னார் நான் ஆந்திராவை சேர்ந்தவன் தெலுங்குக்கு கிடைக்கவில்லையே என்று மக்கள் என்னிடம் கேட்பார்கள். அதேபோல கேரளா, கர்நாடகாவை சேர்ந்தவர்களும் இதேபோன்று கூறினார்கள். பிரதமர் மன்மோகன் சிங் கோப்பை தள்ளி வைத்துவிடலாம் என்று கேட்டார்.
நான் உடனே அலைபேசியில் முத்தமிழறிஞர் கலைஞரிடம் இது குறித்து பேசினேன். அப்பொழுது அவர் சொன்னார் நான் சொல்வதை சொல் எல்லாம் சரியாகிவிடும் என்று அவர் கூறியபடி, வந்து தமிழ் போன்றே எல்லா மொழிகளுக்கும் சிறப்பு இருக்கிறது. தமிழ் போன்றே மற்ற மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து கொடுங்கள் என்று கூறினேன். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது மற்றும் மொழிகளுக்கும் ( மலையாளம், கன்னடம்)செம்மொழி அந்தஸ்து வழங்கப்படும் என்றார்கள்.
உதயநிதி புதிய கருத்தை ஒன்றும் கூறவில்லை. பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் என அனைவரும் கூறிய கருத்தைதான் உதயநிதி ஸ்டாலினும் கூறி உள்ளார். பிறப்பால் யாரும் தாழ்ந்தவர் அல்ல, உயர்ந்தவர் அல்ல. அப்படி பிரித்தால் நாங்கள் எதிர்ப்போம் என்பதைதான் தெரிவித்தார். அவ்வாறு பிரித்தால் அதனை தொடர்ந்து எதிர்ப்போம். திமுக சமத்துவத்திற்கான கட்சி.
உதயநிதி ஸ்டாலின் கூறியதை இந்துக்களுக்கு எதிரான கருத்து என திரிக்கின்றனர். இந்துக்களுக்கு எதிரான கருத்தை உதயநிதி கூறவில்லை. எத்தனை வழக்கு போட்டாலும் தான் கூறிய கருத்தில் உறுதியாக உள்ளதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். சமத்துவம் வரும் வரை போராட்டம் தொடரும், என்றார்.