எச்சரிக்கையை மீறிய அமைச்சர்கள், நிர்வாகிகள் : மீண்டும் கலக்கத்தில் CM ஸ்டாலின்?!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2022, 8:02 pm

தனது அமைச்சரவை சகாக்களும், கட்சியின் நிர்வாகிகளும் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி அது பெரும் விவாதப் பொருளாக மாறுவதை திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் விரும்பவில்லை என்பதை வெளிப்படையாகவே தெரிந்து கொள்ள முடிகிறது.

சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்கள்

அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், ராஜ கண்ணப்பன், அனிதா ராதா கிருஷ்ணன், அன்பில் பொய்யாமொழி மற்றும் கட்சி நிர்வாகிகள் அடிக்கடி சர்ச்சையில் சிக்கியதுதான் இதற்கு காரணம்.

குறிப்பாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தன்னிடம் மனு கொடுக்க வந்த பெண்ணின் தலையில் அந்த மனுவை வைத்தே தட்டியது, அரசு டவுன் பஸ்களில் மகளிருக்கான இலவச பயணத் திட்டம் குறித்து ஒரு கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, ‘நீங்க எல்லாம் டவுன் பஸ்ல ஓசிலதானே போறீங்க?’ என்று கிண்டலாக கூறியது தமிழக பெண்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வுகள் ஊடகங்களில் பரபரப்பு செய்தியாகவும் இடம் பிடித்தன.

இது ஆட்சிக்கும், கட்சிக்கும் அவப்பெயரை உருவாக்கும் என்று கருதிய
ஸ்டாலின் இதுபற்றி கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி சென்னையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் மிகுந்த மன வேதனையோடு பேசினார்.

மனவேதனையை கொட்டிய முதலமைச்சர்

அவர் கூறும்போது, “தமிழகத்தில் மழை பெய்யவில்லை என்றாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள், மழை அதிகமாக பெய்தாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். ஒரு பக்கம் திமுக தலைவர், இன்னொரு பக்கம் தமிழகத்தின் முதலமைச்சர்; மத்தளத்திற்கு 2 பக்கமும் அடி என்பதை போல உள்ளது என் நிலைமை! இத்தகைய சூழலில், மேலும் துன்பப்படுத்துவது போல கழக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்துகொண்டால் நான் என்ன செய்வது? யாரிடம் போய் சொல்வது? நாள்தோறும் காலையில், நம்மவர்கள் எந்த புது பிரச்னையும் உருவாக்கியிருக்க கூடாது என்ற நினைப்போடுதான் கண் விழிக்கிறேன்; சில நேரங்களில் தூங்க விடாமல் ஆக்கிவிடுகிறது; என் உடம்பை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்! அமைச்சர்களின் அலட்சியமான பேச்சால் தூக்கத்தை தொலைக்கிறேன்.

இன்று எல்லோருக்கும் மூன்றாவது கண்ணாக செல்போன் முளைத்துவிட்டது. உங்களது ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது.

திமுகவினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

எனவே நாம் பயன்படுத்த வேண்டிய சொற்கள் மிக மிக முக்கியமானவை, ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்; இதனால் அடுத்தவர்களிடம் பேசும் போது மிக மிக எச்சரிகையாக பேசுங்கள். பொதுமேடையில் மட்டுமல்லாது தனிப்பட்ட உரையாடல்களிலும் கவனமுடன் பேசவேண்டும்” என்று யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தார்.

ஸ்டாலின் இப்படி மனம் நொந்து பேசி, இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. ஆனால் அடுத்தடுத்து அமைச்சர் பொன்முடி, மனோ தங்கராஜு, திமுகவின் நட்சத்திர பேச்சாளர் சைதை சாதிக் மூவரும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலத்த கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஒரு பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டனர்.

அவர்களின் செயல்பாடுகள் தற்போது எதிர்க்கட்சிகள் எள்ளி நகையாடுவதற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் அமைந்துவிட்டதுடன் திமுகவுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் கடும் தலைவலியை ஏற்படுத்தியும் இருக்கிறது சொன்னால் மிகை ஆகாது.

சைதை சாதிக் கீழ்த்தரமான பேச்சு

சென்னை ஆர்.கே.நகரில் அண்மையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில்
திமுக நிர்வாகியான சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளும் நடிகைகளுமான குஷ்பு, நமீதா, காய்த்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை ஒருமையிலும், இரட்டை அர்த்ததத்திலும் அவதூறாக பேச இந்த விவகாரம் பூதாகரமாக மாறியது. அவருடைய பேச்சு ஒட்டுமொத்த திமுகவின் இமேஜையும் அப்படியே டேமேஜ் செய்வது போல அமைந்துவிட்டது.

மீண்டும் சர்ச்சையில் அமைச்சர் பொன்முடி

இது ஒருபுறம் இருக்க அதே நாளில் அமைச்சர் பொன்முடியால் மற்றொரு சர்ச்சையும் வெடித்தது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரித்து டி.எடப்பாளையம் பெயரில் தனி வருவாய் கிராமம் உருவாக்க எதிர்ப்பு தெரிவித்து, கொட்டும் மழையிலும் சித்தலிங்கமடம் கிராம மக்கள் வருவாய்த் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுபற்றி கேள்விப்பட்டு அந்த கிராமத்துக்கு விரைந்த அமைச்சர் பொன்முடி கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதனால் ஒருகட்டத்தில் பொறுமையிழந்த அமைச்சர், தகாத வார்த்தைகளால் பொதுமக்களை திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கொதித்தெழுந்த குஷ்பு

ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்; எனவே பொதுவெளியில் பேசும்போது மிக மிக எச்சரிகையாக பேசுங்கள் என்று கட்சியினரை திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்து ஒரு மாதமே ஆன நிலையில், கட்சியின் மூத்த அமைச்சரும், நிர்வாகியும் ஒரே நாளில் சர்ச்சையில் சிக்கியது, திமுக தலைமைக்கு தர்மசங்கடத்தையும், கட்சிக்கு மீண்டும் அவப்பெயரை ஏற்படுத்தம் விதத்திலும் அமைந்து விட்டது.

இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், சைதை சாதிக்கின் அவதூறு பேச்சு தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட குஷ்பு, “ஆண்கள் பெண்களை தவறாகப்பேசுவது, அவர்கள் வளர்க்கப்பட்ட விதத்தையும், அவர்கள் வளர்ந்த மோசமான சூழலையும் காட்டுகிறது. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். இதுபோன்ற ஆண்கள் தங்களை ‘கலைஞரை பின்பற்றுபவர்கள்’ என்று அழைத்துக் கொள்கிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிட மாடலா?” என்று ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளை டேக் செய்து கேள்வி எழுப்பியிருந்தார்.

சாரி சொன்ன கனிமொழி

குஷ்புவின் இந்த பதிவுக்கு பதிலளித்த கனிமொழி, “ஒரு பெண்ணாகவும் மனிதராகவும் இதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். இதை யார் செய்திருந்தாலும், சொன்ன இடம் அல்லது அவர்கள் சார்ந்த கட்சி எதுவாக இருந்தாலும் இது எக்காரணத்தைக் கொண்டும் சகித்துக்கொள்ள முடியாதது. தி.முக.வுக்கும் இது ஏற்புடையது இல்லை’ என்று மன்னிப்பு கோரினார்.

என்ற போதிலும் சைதை சாதிக், இப்படி பெண்களை இழிவாக பேசியபோது மேடையில் இருந்த அமைச்சர் மனோ தங்கராஜ் கைத்தட்டி ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார் என்றும் அதற்காக, அவரும் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவரை விடமாட்டேன்” என்றும் குஷ்பு ஆவேசமாக கூறினார்.

மாட்டடிக்கிட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்

ஆனால் அதற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள மனோ தங்கராஜ், “திமுக பேச்சாளர் பேசிய கருத்திற்கு கூட்டம் முடிந்தவுடன் அவரை அழைத்து கண்டித்தேன். பெண்களை இழிவாக பேசுவது எனக்கோ கழகத்திற்கோ உடன்பாடு இல்லை. ஏற்றுக்கொள்ளக் கூடியதும் அல்ல. திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி இது தொடர்பாக வருத்தம் தெரிவித்த பின்னரும் தன்னை விளம்பரப்படுத்துவதற்காக குஷ்பு ஏதோ பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

“அமைச்சரின் இந்த பதில் தான், அவருக்கு இப்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது”
என்று சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இது வாட்ஸ் அப் யுகம்

“பொதுவாக 50 ஆண்டுகளுக்கு முன்பு திமுக பேச்சாளர்களில், தீப்பொறி ஆறுமுகம், வெற்றி கொண்டான் போன்றோர், இப்படி குதர்க்கமாகவும் அவதூறாகவும் பேசுவது வழக்கம். அந்த காலகட்டத்தில் இது பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. திமுககாரர்கள் என்றாலே இப்படித்தான் பேசுவார்கள், பொது இடம் என்று கூட பார்க்காமல் கொஞ்சமும் நாகரிகம் இல்லாமல் அசிங்கமாக பேசுவார்கள் என்று விமர்சித்து விட்டு அதை கடந்துபோய் விடுவார்கள்.

ஆனால், இதுவோ வாட்ஸ் அப் யுகம். நீங்கள் ம்… என்று சொன்னாலே அது மறுகணமே வீடியோவாக வைராலாகும் பெரும் ஆபத்து உள்ளது.

தவிர ஆண்கள் மட்டுமே அரசியலில் கோலோச்சி வந்த காலம் இன்று மலை ஏறிப் போய்விட்டது. பெண்களும் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. அதுவும் குறிப்பாக திரைப்படத்துறையை சேர்ந்த நடிகைகள் தங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து அந்த கட்சியின் கூட்டங்களில் கலந்துகொண்டு விட்டால் அவர்களுக்கு சமூகத்தில் தனி மவுசும் கிடைத்து விடுகிறது.

அதனால் அவர்களைப்பற்றி அரசியல் கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் விமர்சிக்கும்போது கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். அதுவும் குறிப்பாக ஆண்களில் சரி பாதியாக உள்ள பெண்களுக்கும் உரிய மரியாதையும் தரவேண்டும்.

அப்போதே தடுத்திருந்தால்….!

திமுகவின் நட்சத்திர பேச்சாளர் சைதை சாதிக் பாஜகவில் உள்ள பிரபல நடிகைகள் குஷ்பு, நமீதா, காய்தரி ரகுராம், கவுதமி நால்வரையும் இழிவுபடுத்தும் விதமாக மேடையில் பேசிய போதே, அதை எழுந்து நின்று அமைச்சர் மனோ தங்கராஜ் உடனடியாக கண்டித்து இருக்கவேண்டும். இதுபோல் பேசுவது கட்சிக்குத்தான் களங்கத்தை ஏற்படுத்தும். இனியும் இப்படி பேசக்கூடாது என்று அவரை அறிவுறுத்தி இருக்கவேண்டும்.

அப்போதுதான் கட்சியின் தலைவர் ஸ்டாலின் சொன்னதை அமைச்சர் அப்படியே பின்பற்றுகிறார் என்ற எண்ணம் திமுகவினருக்கு ஏற்படும். மற்றவர்களும் அதுபோல் பொதுவெளியில் பேசத் தயங்குவார்கள். ஆனால் அமைச்சரோ, அந்த நேரத்தில் எதுவும் பேசாமல், கூட்டம் முடிந்த பிறகு சைதை சாதிக்கை அழைத்து நான் கண்டித்தேன் என்று கூறுவது வேதனையாகவும், நம்புவதற்கு கடினமாகவும்
உள்ளது.

அதேநேரம் இது நான்கு நடிகைகளை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தாய்க் குலத்தையே இழிவு படுத்திபேசுவது போலாகும் என்பதை அமைச்சர் மனோ தங்கராஜோ, சைதை சாதிக்கோ உணர்ந்ததாக தெரியவில்லை.

அண்ணாமலை நடத்திய போராட்டம்

தவிர திமுக நிர்வாகி சாதிக்கை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் 500க்கும் மேற்பட்ட பாஜக மகளிர் அணியினர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போலீசார் அவர்களை கைது செய்ததும், இந்த விவகாரத்தை இன்னும் விஸ்வரூபம் எடுக்க வைத்துவிட்டது.

தங்களை இழிவுபடுத்தி பேசுவதை எந்த பெண்ணுமே விரும்புவதில்லை. இப்போது அவர்கள் மௌனமாக இருந்தாலும் கூட தேர்தல் நேரத்தில் அதை வெளிப்படுத்த தயங்க மாட்டார்கள் என்பதை திமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் உணர வேண்டும். என்னதான் திமுக அரசு பெண்களுக்கு நலத்திட்டங்களை அறிவித்து நிறைவேற்றினாலும் கூட அதை தேர்தல் நேரத்தில் மறந்து விடுவதற்கான வாய்ப்புகளே அதிகம். அவர்களை இழிவுபடுத்தி பேசியதுதான் முதலில் நினைவுக்கு வரும்.

அமைச்சர் பொன் முடியை பொறுத்தவரை திமுகவின் மூத்த தலைவர்களில் அவரும் ஒருவர். உயர் கல்வித் துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். ஏற்கனவே பொதுவெளியில் பெண்களை கேலி செய்யும் விதமாக இரண்டு முறை பேசியது அவர் மீது கட்சித் தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இவர் போன்ற அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளை கண்டிக்கும் விதமாகத்தான் திமுக தலைவர் ஸ்டாலின் பொதுக்குழுவில் மறைமுக எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

இனியும் ஸ்டாலின் தூக்கத்தை தொலைப்பாரோ?

கட்சித் தலைமையின் இந்த எச்சரிக்கையையும் மீறி, இவர்கள் இ்வ்வாறு பேசுவதை, இவர்களின் பக்குவம் இவ்வளவுதானா அல்லது தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் விதத்தில் வேண்டுமென்றே இப்படி பேசுகிறார்களா? என்ற சந்தேகத்தையும் கிளப்புகிறது.

பொன்முடி பொது இடங்களில் தொடர்ந்து இப்படி சர்ச்சைக்கு இடமளி்க்கும் விதத்தில் தொடர்ந்து பேசி வந்தாலும், கட்சியின் தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் இவரை போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கிண்டலடிக்கும் அளவுக்கு இந்த இரு விவகாரங்களும் மாறிவிட்டன.

ஏற்கனவே திமுக துணை பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆ.ராசா இந்துக்களை அவதூறாக பேசியதே இன்னும் பரவலாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் திமுக தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் தமது கடுமையான நடவடிக்கைகளால், அமைச்சர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களுக்கும் தங்களது பொறுப்பை உணர செய்ய வேண்டும். இதை செய்ய தவறினாலோ, தயங்கினாலோ இனியும் ஸ்டாலின் தூக்கத்தை இழக்க வேண்டியதுதான் வரும்” என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 481

    0

    0