தப்பியது அமைச்சரின் தலை… சிக்கிய மகன், மருமகன் : பதவியை பறித்து திமுக தலைமை நடவடிக்கை!!!
Author: Udayachandran RadhaKrishnan4 September 2023, 1:15 pm
தப்பியது அமைச்சரின் தலை… சிக்கிய மகன், மருமகன் : பதவியை பறித்து திமுக தலைமை நடவடிக்கை!!!
அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் மொக்தியார் அலி மஸ்தான், மருமகன் ரிஸ்வான் ஆகியோரின் கட்சி பதவிகளை திமுக தலைமை பறித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியான செய்தியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுஅணி துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்ட ரிஸ்வான் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
அவருக்கு பதிலாக பள்ளியம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஷேக்வாகித் நியமிக்கப்படுகிறார். ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஷேக்வாகித்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கான உத்தரவை திமுக விளையாட்டு அணி மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறன் எம்பி அறிவித்துள்ளார்.
அது போல் விழுப்புரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட கே.எஸ்.எம். மொக்தியார் அலி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக பெரும்புகை கிராமத்தை சேர்ந்த ரோமியன் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கெனவே நியமிக்கப்பட்ட மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளரும் அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார்.
அமைச்சராக பொறுப்பேற்றது முதலே செஞ்சி மஸ்தான் மீது புகார் குவிந்து வந்தன. கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது மாற்றுக் கட்சியில் இருந்து வந்தோருக்கு சீட் கொடுக்கப்பட்டது. பெரும்பாலான பொறுப்புகள் தன் குடும்ப உறுப்பினர்களுக்கே மஸ்தான் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
சாராய வியாபாரி மரூர் ராஜாவுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த மாதம் திண்டிவனம் நகராட்சியின் நிர்வாக செயல்பாடுகளைக் கண்டித்து நகர்மன்றக் கூட்டத்திலிருந்து 13 திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அது மட்டுமல்லாமல் அமைச்சர் மஸ்தான் குறித்து திமுக தலைமைக்கு அந்த 13 கவுன்சிலர்களும் புகார் அளித்துவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 31 ஆம் தேதி திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றக் கூட்டம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தை முழுவதும் அமைச்சர் மஸ்தானின் குடும்பமே பொறுப்பேற்று அதிகாரம் செய்து வருவதாக குற்றச்சாட்டு திமுக தலைமைக்கு சென்றது.
அமைச்சரின் குடும்பத்தினரே கட்சி பொறுப்புகளில் இருந்து வருவதால் கட்சித் தொண்டர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஏற்கெனவே பால்வளத் துறை அமைச்சராக இருந்த நாசரின் மகன் பதவி பறிக்கப்பட்டது, பிறகு அவரது செயல்பாட்டுக்காக அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.