அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயகக் கட்சி..? ஆட்டத்தை ஆரம்பித்த இபிஎஸ்… சேலத்தில் நடந்த திடீர் சந்திப்பு..!

Author: Babu Lakshmanan
3 October 2023, 1:06 pm

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி விவகாரத்தில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.

2019 மற்றும் 2021ல் நடந்த தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்தே அதிமுக போட்டியிட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக போட்டியிட்ட தேர்தல்களில் எதிர்பார்தத வெற்றி கிடைக்கவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், பாஜகவுடன் கூட்டணி வைத்ததும் ஒரு காரணமாக சொல்லப்பட்டு வந்தது.

இருப்பினும், பாஜக கூட்டணியில் அதிமுக நீடித்து வந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால் இரு கட்சியினரிடையே மோதல் போக்கு ஏற்பட்டது. ஜெயலலிதா, அண்ணா குறித்து அவர் பேசியது அதிமுகவினரிடையே பொறுமையை இழக்கச் செய்தது. இதனால், பகிரங்கமாக வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இருப்பினும், தன்னுடைய கருத்தில் இருந்து அண்ணாமலை பின்வாங்கவில்லை.

ஒருகட்டத்தில் பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என்று அதிமுக அறிவிப்பை வெளியிட்டது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2024ல் மட்டுமல்ல 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வந்த அதிமுக நிர்வாகிகள், கூட்டணி அமைப்பதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி இன்று சந்திக்க உள்ளார்.

இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் மிகத் தீவிரம் காட்டி வரும் தமிமுன் அன்சாரி, இதற்காக வேல்முருகன், திருமாவளவன், டி.ராஜா, கே.பாலகிருஷ்ணன், அமைச்சர் ரகுபதி என பலரையும் நேரில் சந்தித்து பேசினார். மேலும், வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது சிறப்பு தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி வருகிறார்.

அந்த வகையில், இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க இருமுறை நேரம் கேட்டும், முதலமைச்சர் தரப்பிலிருந்து தமிமுன் அன்சாரிக்கு நேரம் கொடுக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, தமிமுன் அன்சாரிக்கு நேரம் கொடுத்து சேலம் இல்லத்திற்கு வரச் சொல்லியுள்ளது. இதனை ஏற்று தமிமுன் அன்சாரி எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார். இதன்மூலம், விட்டுப்போன சிறுபான்மையினரின் வாக்குகளை மீண்டும் அதிமுக திருப்பியெடுக்க முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, இன்றைய தினம் கூட்டணி பற்றி பேச வாய்ப்பில்லை. இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டசபையில் பேச வலியுறுத்தியே எடப்பாடி பழனிசாமியை தமிமுன் அன்சாரி சந்திக்கிறார் என்று மனிதநேய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிமுன் அன்சாரிக்கு எம்.எல்.ஏ. என்ற அடையாளத்தை பெற்றுக்கொடுத்த கட்சி அதிமுக என்பதும் அதற்கு முழுக் காரணம் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!