திமுகவின் திட்டமிட்ட நாடகம்… மகனை அமைச்சராக்க மாட்டேன்னு எழுதித் தர முடியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
1 June 2022, 12:52 pm

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க மாட்டோம் என்று எழுதித் தர முடியுமா..? என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக எம்எல்ஏவும், முதலமைச்சர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என திமுகவில் குரல்கள் வலுத்து வருகின்றன. குறிப்பாக, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Udhayanithi - Updatenews360

ஆனால், தன்னை எப்போது அமைச்சராக்க வேண்டும் என்பது கட்சி தலைமைக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்கு தெரியும் என்றும், தீர்மானங்களை நிறைவேற்றி நெருக்கடி கொடுக்க வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கும் விவகாரத்தை பேசு பொருளாக்கி, அதன்மூலம் அவரை அமைச்சராக்க திமுக திட்டமிட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

Seeman -Updatenews360

சென்னை பூந்தமல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- திமுக ஆட்சி அமைந்த பிறகு கொரோனா காலத்தில் போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்தார். ஆனால், எங்கள் மீது போட்ட வழக்கிற்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சொல்வது என்ன நியாயம்..? முதலமைச்சர் ஸ்டாலின் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதற்குதான் இந்த தள்ளுபடியை அறிவித்தார்களா..?

புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் திமுக அரசின் நிலைப்பாட்டை முதலில் தெரிவிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் இந்தி, சமஸ்கிருதம்தான் ஊக்குவிக்கப்படுகின்றன. உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக அமைச்சராக ஆவார். ஐந்து ஆண்டுகளுக்கு அவரை அமைச்சராக்க மாட்டேன் என எழுதிக் கொடுக்கச் சொல்லுங்களேன். அதன் பிறகு நான் இதைப் பற்றி பேசுகிறேன். பேசு பொருளாக்கி அமைச்சராக்க முயற்சி செய்கிறார்கள். உதயநிதியை அமைச்சராக்க எதிர்ப்பு இல்லை என அரங்கேற்றும் நாடகம் இது, எனக் கூறினார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!