திமுகவினருக்கு CM ஸ்டாலின் திடீர் நிபந்தனை…? அதிர்ச்சியில் மூழ்கிய நிர்வாகிகள்!

Author: Babu Lakshmanan
28 February 2023, 7:48 pm

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தனது 70-வது பிறந்த நாளையொட்டி அதை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் கட்சியினர் யாரும் பேனர்கள் வைக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். ஆனால் இதை திமுகவினர் எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்கும் ஒரு விஷயமாக மாறிவிட்டது.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “என்னுடைய 70-வது பிறந்தநாள்
என்பது அதற்கான ஒருங்கிணைப்பை உருவாக்கக்கூடிய ஒரு வாய்ப்பு என்பதைத்தவிர, வேறு வகையான ஆடம்பரங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நான் ஒருபோதும் விரும்புவதில்லை. பிறந்தநாள் விழா என்ற பெயரில் பேனர் வைப்பது, அலங்காரங்கள் செய்வது, ஆடம்பர விழாக்களை நடத்துவது என்பதை அறவே தவிர்க்க வேண்டும் என்பதை இப்போதல்ல, இளைஞரணிச் செயலாளராக இருந்தபோதிருந்தே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். எளிமையான முறையில் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றி, ஐம்பெரும் கொள்கை முழக்கமிட்டும், ஏழை எளியவர்களுக்கு நல உதவிகள் செய்தும், கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியும் பயன்தரும் வகையில் செயல்பட வேண்டும்.
கழகத்தினர் எது செய்தாலும், துரும்பைத் தூணாக்கி விமர்சனங்களுக்குக் காத்திருக்கும் எதிர்த்தரப்பினருக்கு கொஞ்சமும் இடம் தராமல் எளிய முறையில் நிகழ்வுகளை நடத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

ஸ்டாலின் இப்படி தனது கட்சியினருக்கு அட்வைஸ் செய்வது இது முதல் முறை அல்ல. 2017-ம் ஆண்டு முதலே இதுபோல அவர் வலியுறுத்தி கூறி வருகிறார். இதற்கு காரணம் அந்த ஆண்டு எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி நவம்பர் மாதம் கோவையில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து அமெரிக்காவிலிருந்து சொந்த ஊர் திரும்பியிருந்த ரகு என்ற இன்ஜினியர் பலியானதுதான்.

இதனால், “கட்சியின் கட்டளைக்கு எதிராக யாராவது செயல்பட்டு பேனர் வைத்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி விதிமுறைகளை மீறி கட்சி தொண்டர்கள் செயல்பட்டால், அதுபோன்ற எந்த விழாவிலும் பங்கேற்க மாட்டேன்” என்று ஸ்டாலின் கொந்தளித்து அதிரடியும் காட்டினார்.

இது மறைமுகமாக அதிமுகவை சாடுவது போலவும் அமைந்திருந்தது. என்றபோதிலும் அப்போது உயிரோடு இருந்த கருணாநிதிக்கு அவருடைய பிறந்தநாளின்போது, கட்அவுட், பிளக்ஸ் பேனர்களை திமுகவினர் மாநில முழுவதும் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் அந்த நேரத்தில் கருணாநிதி உடல் நலக்குறைவுடன் இருந்ததால் இதை ஸ்டாலின் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.

அவருடைய மறைவுக்கு பின்பு 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருவண்ணாமலையில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் பெரிய அளவில் கட்அவுட், பேனர்கள் எதுவும் வைக்கப்படவில்லை. அப்போது இதுபற்றி ஸ்டாலின் பெருமையுடன் கூறுகையில், “திமுக முப்பெரும் விழாவில் பேனர் வைக்காததற்கு நன்றி. இனிமேலும் யாரும் பேனர் வைக்கக்கூடாது. பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பைத்தான் ஏற்படுத்துகிறது. எந்த விழாவிலும் பேனர் வைக்கக் கூடாது” என்று கடுமையான உத்தரவும் போட்டார்.

ஏனென்றால் அதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் அதாவது,செப்டம்பர்
12ம் தேதி சென்னை குரோம்பேட்டையில் ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற பெண் என்ஜினீயர் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த பேனர் காற்றில் சரிந்து அவர் மீது விழுந்ததில் எதிரே வந்த லாரி மோதி பலியாகி இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி ஒரு பிரமாண பத்திரமும் தாக்கல் செய்தார்.

அதில், 2017 ஜனவரி 29ம் தேதி திமுக செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், கட்சி அல்லது பிற நிகழ்சிகளுக்கு சட்டவிரோத பேனர்கள், ப்ளக்ஸ் போர்டுகள், கட்-அவுட்டுகள் வைக்க கூடாது என எச்சரித்துள்ளார். அதன்பின்னர், 2018 ஜூன் 19-ம் தேதி திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில், ஆர்வமிகுதியால் சிலர் பேனர் வைப்பதை தொடர்வதாகவும், அதையும் தவிர்க்க அறிவுத்தபட்டுள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது. இதேபோல் அதிமுக சார்பிலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது

மேலும், அப்போது ஸ்டாலின் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “பொதுமக்களுக்கும், சாலையில் செல்லும் வாகனங்களுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் சாலைகள் மற்றும் தெருக்களில் பேனர்கள், ப்ளக்ஸ் போர்டுகள் வைப்பதை முற்றிலுமாக நிறுத்தவேண்டும்” என்று தனது கட்சியினரை எச்சரித்தும் இருந்தார்.

ஆனால் உதயநிதி 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரச்சாரத்திற்காக தமிழகத்தை வலம் வந்தபோது இளைஞர் அணியின் செயலாளர் என்பதற்காக திமுகவினர் அவருக்கு ப்ளக்ஸ் பேனர்களை வைத்து கொண்டாடினர்.

2021 சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதி வேட்பாளராக உதயநிதி நிறுத்தப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் அவர் பிரச்சாரம் செய்தபோதும் திமுக இளைஞரணியினர் சாலை ஓரங்களில் நூற்றுக் கணக்கான பிளக்ஸ் பேனர்களை வைத்தும், சாலையின் நடுவே வழி நெடுக கட்சியின் கொடிக் கம்பங்களை ஊன்றியும் வரவேற்பளித்தனர்.

இதன் பிறகு 2021 ஆகஸ்ட் மாதம் அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் கலந்துகொண்ட ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக திமுக கொடி கம்பத்தை சாலையின் நடுவே ஊன்றியபோது தினேஷ் என்ற 13 வயது 8-ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தான்.

இந்த நிலையில்தான் கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி காரைக்குடி நகரில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி முடிந்த பின்பு திமுக கொடி கம்பங்களை அகற்றிக் கொண்டிருந்த ஏழுமலை என்பவர் மின்சாரம் தாக்கி அதே இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுபோன்ற துயர சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதால்தான் முதலமைச்சர் ஸ்டாலின் அதனை தவிர்க்கும் பொருட்டு, திமுகவினர் யாரும் பிளக்ஸ் பேனர்கள் கட் அவுட்டுகள் வைக்க கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

“ஆனாலும் அவர் கூறுவதை திமுகவினர் ஒரு பொருட்டாக கருதுவதே இல்லை. 70-வது பிறந்தநாள் விசேஷமான ஒன்று என்பதால் அதில் கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாக நிர்வாகிகளும் தொண்டர்களும் எதையாவது உருவாக்கி விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு முதலமைச்சர் ஸ்டாலினிடம் இருப்பது நன்றாகவே தெரிகிறது. “என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“குறிப்பாக திமுக விழாக்கள், சாதாரண நிகழ்ச்சிகளின்போது பெரும்பாலான இடங்களில் பிரம்மாண்ட அளவில் பிளக்ஸ் பேனர்கள் கட் அவுட் வைப்பது, அலங்காரத் தோரணங்கள் அமைப்பது என்று கட்சியினர் அமர்க்களப் படுத்துகின்றனர்.

ஆளுங்கட்சியாக இருப்பதால் அனுமதி பெற்ற இடங்களைத் தவிர அனுமதிக்கப்படாத பகுதிகளிலும் சாலையின் ஓரங்கள், மையப்பகுதிகள் என ஆயிரக்கணக்கில் திமுக கொடி கம்பங்களை ஊன்றி வைக்கின்றனர். இது போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக இருப்பதுடன் மக்களின் நடமாட்டத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

ஏனென்றால் சாலை ஓரங்களிலும் நடுவிலும் கொடிகள் கட்ட மாட்டோம், கம்பங்கள், பேனர்கள் வைக்க மாட்டோம் என்று சென்னை ஐகோர்ட்டில் 4 வருடங்களுக்கு முன்பு திமுக பிரமாண பத்திரமே தாக்கல் செய்தது. ஆனால் இதையெல்லாம் மறந்துவிட்டு தமிழகம் முழுவதும் தற்போது திமுகவினர் ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும், அமைச்சர்களுக்கும் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது, கொடிகள் தோரணங்கள் கட்டுவது தொடர்கதையாக உள்ளது. ஸ்டாலின் சொல்வதை யாரும் கட்சியில் கேட்பதில்லை, அவரும் அதை வன்மையாக கண்டிப்பதில்லை என்பதுதான் இதில் எதார்த்தம்.

தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் பிளக்ஸ் பேனர்கள் வேண்டாம், கட் அவுட்டுகள் கூடாது கட்சி கொடி கம்பங்கள், அலங்கார தோரணங்கள் வேண்டியதில்லை என்று ஒரு சம்பிரதாயத்துக்காக ஸ்டாலின் கூறுவதுபோல்தான் இது உள்ளது. தனது வேண்டுகோளையும் மீறி சட்ட விரோதமாக பிளக்ஸ் பேனர்கள் வைக்கும், அலங்கார வேலைப்பாடுகள் செய்யும் திமுகவினரை உள்ளூர் கட்சி நிர்வாகிகள் மூலம் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அதற்கு பயப்படுவார்கள்.

ஏனென்றால் இந்த படோபடங்களால் திமுக மீது மக்களுக்கு வெறுப்பு தான் ஏற்படும் என்று ஸ்டாலினே கூறியிருக்கிறார். அப்படி இருந்தும் கூட அவர் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார். தவிர தற்போது இளைஞர் அணியினர் அவருடைய மகனும் அமைச்சருமான உதயநிதிக்குத்தான் மிக மிக அதிக அளவில் பேனர்கள் வைக்கின்றனர். சாலை ஓரங்களிலும் நடுவிலும் கொடி கம்பங்களை ஊன்றித் தள்ளுகின்றனர். அவர்களிடம் எந்த கேள்வியும் முதலமைச்சர் ஸ்டாலினால் கேட்க முடியவில்லை என்பதே நிஜம்.

அதுவும் உதயநிதிக்கு ஆதரவாக செயல்படும் அமைச்சர்களில் பலர் இப்படி எல்லை மீறுவதுதான் வேதனை.

இதனால் நான் கண்டிப்பது போல் கண்டிக்கிறேன். அதற்கு கட்டுப்பட்டு நடப்பதும் நடக்காததும் உங்கள் இஷ்டம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவதுபோல்தான் இது உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இதை உண்மையிலேயே ஒரு எச்சரிக்கை விடுப்பது போல்தான் கூறி இருக்கிறார் என்றால் வரம்பு மீறி நடந்து கொள்ளும் தனது கட்சிக்காரர்கள் மீது அவர் நடவடிக்கை எடுத்தால்தான் மக்களுக்கு நம்பிக்கை வரும்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

  • Bigg Boss Season 8 tamil Voice Over Artist பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவரா.. எல்லா மொழியிலும் பிண்றாரே..!!
  • Views: - 455

    0

    0