‘சட்டை என்னோடது, ஆனால் மாப்பிள்ளை நானில்லை’… லட்சியத் திட்டத்தை அபகரித்த திமுக ; ம.நீ.ம முன்னாள் நிர்வாகி விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
15 September 2023, 1:04 pm

முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை இன்று தொடங்கி வைத்த நிலையில், மய்யத்தின்‌ லட்சியத்‌ திட்டத்தை திமுக அபகரித்து விட்டதாக மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் நிர்வாகி பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உழைக்கும்‌ மகளிரை அங்கீகரிக்கும்‌ வகையில்‌ “கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ தொகை: சிறப்புத்‌ திட்டத்தை பேரறிஞர்‌ அண்ணா அவர்களின்‌ பிறந்த நாளான இன்று (15.09.2023) காஞ்சிபுரத்தில்‌ தொடங்கி வைத்துள்ள தமிழக முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்களுக்கு பாராட்டுகள்‌. அதே சமயம்‌ அந்த திட்டம்‌ தங்களின்‌ எண்ணத்தில்‌ இருந்து உதயமானது போல பெருமை பேசும்‌ தமிழக முதல்வரும்‌, திமுகவினரும்‌ இந்த திட்டத்திற்கான மூலக்காரணம்‌ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை ஒருகனம்‌ சிந்தித்துப்‌ பார்க்க வேண்டும்‌.

ஏனெனில்‌ கடந்த 2021ல்‌ தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல்‌ அறிவிக்கப்பட்ட போது தேர்தல்‌ வாக்குறுதிகளை அறிக்கைகளாக ஒவ்வொரு அரசியல்‌ கட்சிகளும்‌ தயாரித்து கொண்டிருந்த சமயத்தில்‌ “பெண்களின்‌ குறிப்பாக இல்லத்தரசிகளின்‌ உழைப்பு ஒரு நாள்‌ ஒட்டுமொத்தமாக நின்று போனால்‌ உலகின்‌ இயக்கமே நின்று போகும்‌, அதனால்‌ “அவர்களின்‌ உழைப்பு அசாத்தியமானது” என்பதால்‌ போற்றப்பட, அங்கீகரிக்கப்பட வேண்டும்‌ என்கிற அடிப்படையில்‌ “இல்லத்தரசிகளுக்கு ஊதியம்‌” என்கிற வாக்குறுதியை எவ்வளவு தொகை..? என்பதை குறிப்பிடாமல்‌ “மக்கள்‌ நீதி மய்யம்‌” கட்சியின்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌ இடம்பெறச்‌ செய்தார்‌ அக்கட்சியின்‌ தலைவர்‌ திரு. கமல்ஹாசன்‌ அவர்கள்‌.

குடும்பத்‌ தலைவிகளின்‌ உழைப்பை அங்கீகரிக்கும்‌ வகையில்‌ “இல்லத்தரசிகளுக்கு ஊதியம்‌” என்கிற சிறப்பான வாக்குறுதியை “மக்கள்‌ நீதி மய்யம்‌ தலைவர்‌ திரு. கமல்ஹாசன்‌ அவர்கள்‌ அறிமுகம்‌ செய்த போது “இது சாத்தியமே இல்லை… செயல்படுத்தவே முடியாது, போகாத ஊருக்கு வழி சொல்கிறார்‌. என்றெல்லாம்‌ கமல்ஹாசன்‌ அவர்கள்‌ குறித்து அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுகவும்‌, தற்போதைய ஆளுங்கட்சியான திமுகவும்‌ எள்ளி நகையாடின. உதிரிக்‌ கட்சிகளும்‌ தங்களின்‌ பங்கிற்கு “ஜிங்ஜக்‌” தட்டின.

மேலும்‌ மக்கள்‌ நீதி மய்யத்தின்‌ -இல்லத்தரசிகளுக்கு ஊதியம்‌” என்கிற வாக்குறுதியை எள்ளி நகையாடிய திமுகவோ, சட்டமன்றத்‌ தேர்தல்‌ நெருங்கத்‌ தொடங்கியதும்‌ கொஞ்சம்‌ கூட கூச்சமின்றி அதனை திருடி, “சட்டை என்னோடது, ஆனால்‌ மாப்பிள்ளை நானில்லை” என்கிற திரைப்பட வசனத்திற்கேற்ப அத்திட்டத்தை “கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ தொகை திட்டம்‌” என மாற்றி அறிவித்ததோடு, நாங்கள்‌ ஆட்சிக்கு வந்தால்‌ குடும்ப அட்டை உள்ள குடும்பத்‌ தலைவிகள்‌ அனைவருக்கும்‌ மாதந்தோறும்‌ 1000ம்‌ ரூபாய்‌ உரிமைத்‌ தொகையாக வழங்குவோம்‌ என பெண்களின்‌ மனதில்‌ ஆசையை தாண்டி விட்டது.

ஆனால்‌ ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்குப்‌ பிறகு அமுல்படுத்தப்படும்‌ அந்த திட்டத்திற்கான பயனாளிகளை தேர்ந்தெடுப்பதில்‌ தேர்தலின்‌ போது தாங்கள்‌ அளித்த வாக்குறுதியை தங்களின்‌ வசதிக்கேற்ப திமுக மறந்து போனதோடு, இந்த திட்டத்தின்‌ மூலக்காரணம்‌ மக்கள்‌ நீதி மய்யமும்‌, அதன்‌ தலைவர்‌ திரு. கமல்ஹாசன்‌ அவர்களும்‌ தான்‌ என்பதையும்‌ அடியோடு மறைத்து விட்டிருக்கிறது.

எது எப்படியோ மற்றவரின்‌ சிந்தனையை திருடி, தனது சிந்தனை போல்‌ செயல்படுத்தினாலும்‌ 16 கோடி மகளிருக்கு சொற்ப தொகையை வழங்கியதற்காக தமிழக முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்களையும்‌, தமிழக (திமுக) அரசையும்‌ மீண்டும்‌
ஒரு முறை பாராட்டுவோம்‌, என தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 311

    0

    0