தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு பரவலா…? அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய தகவல்

Author: Babu Lakshmanan
30 May 2022, 8:21 pm

தமிழகத்தில் குரங்கம்மை நோய் பாதிப்பு இல்லை எனவும், இந்நோய் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அதிதீவிர சிகிச்சைப்பிரிவை துவக்கி வைத்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், 15 பேருக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினார். மேலும், கோவை அரசு மருத்துவமனையில் சுமார் 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜைக்கா திட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடப் பணிகளை பார்வையிட்டார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 2099 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவுகள் தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 32 படுக்கைகளுடன் கூடிய அதி தீவிர சிகிச்சை பிரிவு இன்று பயன் பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

இதில் அனைத்து வசதிகளுடனான நவீன உபகரங்களை கொண்ட சிகிச்சை பிரிவு உள்ளதால் நோயாளிகளுக்கு மிகுந்த பயனை தரும் எனவும், Bosch நிறுவனம் சிஎஸ்ஆர் நிதியில் 12 படுக்கைகள் கொண்ட தனி தீவிர சிகிச்சை பிரிவில் தற்கொலை முயற்சி செய்யும் நோயாளிகளுக்கான தனி சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜைக்கா நிதியில் கட்டப்படும் கூடுதல் கட்டிடங்களை பார்வையிட படுவதாகவும், இந்த பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் முடிவடைய உள்ளதாகவும் தெரிவித்தார்.

வெஸ்ட்னைல் வைரஸ் பாதிப்பு கேரளாவில் ஒருவருக்கு மட்டும் ஏற்பட்டுள்ளதாகவும், தமிழகத்திற்கு நோய் பரவல் வராமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறிய அவர், குரங்கம்மை நோய் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற 12 நாடுகளில் பரவ துவங்கியுள்ளது எனவும், வெளி நாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணிக்க அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் சென்னைக்கு வந்த யூ.கே நாட்டிலிருந்து வந்த விமான பயணி ஒருவரின் முகத்தில் கொப்புளம் இருந்ததால், அவரது ரத்த மாதிரி பூனே ஆய்வகத்திற்கு அனுப்பியதில் நெகட்டிவ் என சான்று வந்துள்ளதாகவும் கூறினார். குரங்கம்மை நோய் குறித்த அறிகுறியோ, சந்தேகமோ இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளதாகவும், எனவே மக்கள் அந்நோய் குறித்து பயப்பட வேண்டாம் என அறிவுறுத்திய மா.சுப்பிரமணியன், கோவையில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாகவும், கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ள சூழலில், இரு ஆண்டுகளில் பணி முடிவடையும் போது, மருத்துவ சுற்றுலா மேம்பாடு அடையும் என்றும், தெரிவித்தார்.

இதேபோல் நோயாளிகளின் தேவைக்கு தகுந்தபடி கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டமைப்பு மேம்படுத்தபடும், எனவும் தெரிவித்தார்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 594

    0

    0