ஒரு பக்கம் தனியார் மயத்தை தீவிரமாக எதிர்க்கும் திமுக இன்னொரு பக்கம் படிப்படியாக தனியார் துறையை நோக்கி பயணிப்பது சமீபகாலமாக வெளிப்படையாகவே தெரிகிறது. முதலில் சென்னையில் உள்ள அரசு பேருந்து பணிமனைகளை தனியார் வசம் ஒப்படைக்க திமுக அரசு முடிவு செய்தது, அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதும் அத்திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டது.
அதன் பிறகு சென்னையில் 500 தனியார் பஸ்களை இயக்குவதற்கு முடிவு செய்தது. இதனால் அரசு ஓட்டுநர், நடத்துனர் பணிகள் என்னவாகும் என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்தது. தவிர சாதாரணஅரசு டவுன் பஸ்களில் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று திமுகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் தொழிற்சங்க பேரவை சிஐடியூ கொந்தளித்தது.
ஏனென்றால் தலைநகர் சென்னையில் தனியார் மயத்தை நாம் அனுமதித்து விட்டோம் என்றால் மற்ற மாவட்டங்களிலும் மெல்ல மெல்ல அரசு போக்குவரத்து கழகங்களை திமுக அரசு தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்து விடும் என்ற சந்தேகம் எழுந்ததாலும், மாநகர சாதாரண பஸ்களில் கட்டணம் செலுத்தாமல் பெண்கள் பயணம் செய்வதால் ஆண்டுக்கு 3000 கோடி ரூபாய் வரை அரசுக்கு கூடுதலாக ஏற்படும் நிதிச் சுமையை தடுக்க தனியாரிடம் அரசு போக்குவரத்து கழகத்தை தனியாரிடம் ஒப்படைக்க திமுக அரசு நினைக்கிறதோ என்று கருதியும் இப்படி போர்க்கொடி உயர்த்தியது. அதன் பிறகு சென்னை நகருக்குள் தனியார் பஸ்களை இயக்குவது தொடர்பான பேச்சு அமுங்கிப் போனது.
இந்த நிலையில்தான் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் சிறுவயதில் படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தை செயல்படுத்த சமூகநலம், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்களை கொண்ட மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். 31ஆயிரம் அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலை உணவு விரிவாக்கத் திட்டத்திற்காக 404 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 17 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.
ஆனால் ஸ்டாலின் இப்படிச் சொல்லி நான்கு மாதங்களே கூட ஆகாத நிலையில், அரசு பள்ளிகளில் ஆரம்ப நிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை மாநிலம் முழுவதும் தனியார் வசம் ஒப்படைக்க திமுக அரசு முடிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அதற்கான முழு வெள்ளோட்டமும்
தலைநகர் சென்னையில்தான் மேற்கொள்ளபட்டிருக்கிறது.
ஏனென்றால் சென்னை மாநகராட்சியின் 358 பள்ளிகளிகளில் காலை உணவு திட்டத்தை 19 கோடி ரூபாயில் ஒப்பந்ததாரர்கள் மூலம் செயல்படுத்த அண்மையில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடந்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானத்தில், “சென்னை மாநகராட்சியில் 38 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதை 358 பள்ளிகளுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் விரிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் அப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 65 ஆயிரத்து 30 மாணவர்கள் பயன்பெற உள்ளனர். இவர்களுக்கு காலை உணவு செலவாக மட்டும் ஒரு மாணவனுக்கு தினமும் 12 ரூபாய் 71 காசு செலவிட வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இப்பள்ளிகளில் ஆண்டு வேலை நாட்கள் தோராயமாக 230 நாள் என கணக்கிடப்பட்டுள்ளது.
அதன்படி, காலை உணவு திட்டத்துக்காக சென்னை மாநகராட்சிக்கு ஆண்டு ஒன்றுக்கு
19 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இப்பணிகளை ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் தனியார் மூலம் மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மாநகராட்சி சார்பில் 27 மைய சமையல் கூடங்களை ஒப்பந்ததாரர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளது. இப்பணிகளை மாநகராட்சியின் வடக்கு, தெற்கு, மத்திய வட்டாரங்கள் வாரியாக மேற்கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த தீர்மானம் வாசிக்கப்பட்ட உடனேயே அதற்கு அதிமுக கவுன்சிலர்கள் தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். திமுகவின் கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் காலை உணவு திட்டத்தை ஒப்பந்த முறையில் தனியாருக்கு வழங்கக் கூடாது என்று முழக்கங்களை எழுப்பினர். ஆனால் காங்கிரஸ், விசிக, மதிமுக கவுன்சிலர்கள் அப்படியே அமைதியாக உட்கார்ந்து இருந்தனர். இதனால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போது பதில் அளித்து பேசிய மேயர் பிரியா சொன்ன இன்னொரு தகவல்தான் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி விட்டுள்ளது. அவர் கூறும்போது “சென்னை மாநகராட்சியில் மட்டும் இத் திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை. பிற பகுதிகளிலும் தனியாருக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
“அரசு பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்டத்தை தனியார் வசம் ஒப்படைப்பதன் மூலம் திமுக அரசு எதை சாதிக்கப் போகிறது என்பது தெரியவில்லை. இத் திட்டத்திற்காக 404 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் இதற்காக ஒப்பந்ததாரர்களை நாடி இருப்பது முறைகேடுகள் நடக்கவே வழிவகுக்கும்” என்று சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
“ஏனென்றால் தனியாரிடம் இது போன்ற திட்டங்களை ஒப்படைக்கும்போது ஒப்பந்ததாரர்கள் குறைந்தபட்சம் 15 சதவீத கமிஷனை எதிர்பார்ப்பார்கள். இதன்படி பார்த்தால் சுமார் 60 கோடி ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் கைகளுக்கு போய் சேர்ந்து விடும். உணவு தயாரிக்க தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்போது அதற்கான தொகையை அரசு உயர்த்திக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அதிலும் அந்த ஒப்பந்ததாரர்கள் கைவரிசை காட்டி விடுவார்கள். அது மட்டுமல்லாமல் உணவை தயார் செய்யும் பணிகளுக்கான வேலை ஆட்களை தங்கள் இஷ்டம் போல் இவர்களே நியமிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
இந்த ஒப்பந்ததாரர்களும் கூட பெரும்பாலும் ஆளும் கட்சியினரால் பரிந்துரை செய்யப்படுவர்களாகத்தான் இருப்பார்கள்.
இவர்கள் காலை உணவு தயாரிக்க அதிக அளவில் சமையல் பொருட்கள் தேவைப்படுகிறது என்று கூறி அதைக்கேட்டு பெற்று வெளியே கடத்துவதற்கும் வாய்ப்பு உண்டு. அவ்வாறு கொடுக்கவில்லை என்றால் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதற்கான முயற்சியிலும் ஈடுபடலாம். இது அரசு கஜானாவை காலி செய்யயும் ஒன்றாக இருக்கும் என்பதுதான் எதார்த்தமான உண்மை.
இதனால் இத் திட்டம் தொடங்கப்பட்டதற்கான நோக்கமே அடிபட்டு போய்விடும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறுவதை பார்த்தால் தமிழகத்தின் மற்ற 20 மாநகராட்சிகளிலும், மற்ற நகராட்சிகளிலும் காலை உணவு திட்டம் தனியார்
வசம் ரகசியமாக ஒப்படைக்கப்பட்டு இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது என்று கூறுகிறார். இது போன்ற நிலையில் தனியார் வசம் ஒப்படைக்காமல் இத்திட்டத்தை அரசே நிறைவேற்றுவதுதான் நல்லது” என்று அந்த சமூக ஆர்வலர்கள் திமுக அரசை வலியுறுத்துகின்றனர்.
இவர்களின் யோசனையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.