அனைத்து சமூகத்தின் வளர்ச்சிதான் திராவிட மாடல் அரசின் கொள்கை : நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார் CM ஸ்டாலின்..!!
Author: Babu Lakshmanan29 August 2022, 1:10 pm
சென்னை : நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கான செயல்முறைகள், பாடத்திட்டம், பயிற்சியை இணையதளம் மூலம் மாணவர்கள் அறியலாம்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- தமிழக மாணவர்களின் திறன் மேம்பட செயல்படுத்தப்படும் திட்டம்தான் நான் முதல்வன் திட்டம். அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதே திராவிட மாடல் அரசின் கொள்கையாகும். தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு முதலீடுகள் செய்கின்றன. நிறுவன முதலீடுகள் குவியும் நிலையில், அவர்களுக்கு தேவையான திறன் படைத்தோரை உருவாக்குவது அவசியமாகும்.
நான் முதல்வன் எனது கனவுத் திட்டம். அனைவரும் ஒவ்வொரு வகையிலும் முதல்வராக வர வேண்டும் என்று நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குறுகிய கால திறன் பயிற்சிகளை நான் முதல்வன் திட்டம் வழங்குகிறது. கல்லூரிகளில் படிக்கும் போதே தனித்திறமைகளை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இணையதளம் மாணவர்களுக்கு பெரிதும் உதவும். புதிய படிப்புகள் ஏராளமான உள்ளன.அவற்றை கற்க மாணவர்கள் முன்வர வேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்புகளை தாண்டி உள்ள பல்வேறு படிப்புகள் குறித்து பெற்றோர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தை எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் ஆங்கில பேச்சாற்றல் வகுப்பு நடைபெறும், எனக் கூறினார்.