அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை… நோயாளிகளுக்கு தையல் போட்ட தூய்மை பணியாளர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
7 July 2023, 7:24 pm

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக, விபத்து அவசர சிகிச்சை பிரிவில் தூய்மை பணியாளர் மருத்துவம் பார்க்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பள்ளிபாளையம், தேவூர், புளியம்பட்டி, வெப்படை, பச்சாம்பாளையம், கத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும் 1000க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் தன்னார்வ அமைப்புகள் உதவியுடன் மருத்துவமனை உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், போதுமான மருத்துவர்கள் இல்லாததால் காலி பணியிடங்கள் நிரப்பக்கோரி அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அமைப்பினர் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விபத்து அவசர சிகிச்சை பிரிவில் இரவு நேரத்தில் அடிபட்டு வந்த ஒருவருக்கு மருத்துவர் இல்லாததால் மருத்துவமனை பெண் தூய்மை பணியாளர் ஒருவர் முகத்தில் தையல் போடும் வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்ந்து, அதில் மருத்துவர் இல்லை எனவும், அதனால் தான் தையல் போடுவதாக கூறுகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கிடையே, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர் இல்லாததால் சிகிச்சைக்காக வரக்கூடிய நோயாளிகள் பெரும் அளவில் ஈரோடு,சேலம் உள்ளிட்ட மாவட்ட மருத்துவமனைக்கு பரிந்துரை செய்வதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். மேலும், விபத்து நேரங்களில் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 339

    0

    0