காமராஜரை புறக்கணித்த காங்கிரஸ் தலைமை.. தமிழகத்தில் காங்கிரஸை இல்லாமல் செய்வோம் : தமிழக நிர்வாகி எச்சரிக்கை!!
Author: Babu Lakshmanan28 February 2023, 1:44 pm
கன்னியாகுமரி ; காங்கிரஸ் தேசிய மாநாட்டின் விளம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் புகைப்படத்தை தவிர்த்ததற்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்குவந்து 55 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இன்னும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வடமாநிலங்களோடு ஒப்பிடுகையில் துடிப்பாக இருக்க பெருந்தலைவர் காமராஜரே அதற்கு முக்கிய காரணம். எளியக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, பல லட்சம் பேருக்குக் கல்வி வெளிச்சம் பாய்ச்சிய படிக்காத மேதை அவர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்து இரு பிரதமர்களை அடையாளம் காட்டிய கிங் மேக்கர் பெருந்தலைவர் காமராஜர்.
அன்னை இந்திராவை முன்னிலைப்படுத்தி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு முகவரி கொடுத்ததே பெருந்தலைவர் காமராஜர் தான். திறந்த மனதோடு சொல்வதாக இருந்தால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கொஞ்சமேனும் மக்கள் மத்தியில் மரியாதை இருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் காமராஜர் தான். அவரால் படித்து, வாழ்வில் உயர்ந்தோர் பலரே அதற்கு சாட்சி. தமிழக முதல்வராகவும், காங்கிரஸின் அகில இந்தியத் தலைவராகவும் அவர் பணிகளை இந்த மடலில் எழுதி அனுப்பினால் கடிதத்தின் எடை உங்கள்(மல்லிகார்ஜுன் கார்கே)எடையை விட கூடலாம். அத்தகைய பெரிய மாமனிதரின் புகைப்படத்தைத் தவிர்த்துவிட்டு காங்கிரஸ் தேசிய மாநாட்டிற்கு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது மிகவும் கண்டனத்துக்குரிய செயலாகும்.
மேலும் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று அவர் பெயரை சொல்லியே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பரப்புரை செய்து இப்போதும் உயிர்பிடித்து நிற்கிறது. ஆனால் காமராஜர் புகழை தமிழக மக்களைவிட காங்கிரஸ் அகில இந்தியத் தலைமைக்கு போதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது வேதனைக்குரிய விஷயம். எனவே இனியும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை காமராஜர் பெயரை இருட்டடிப்பு செய்ய முயலுமே ஆனால், தமிழகம் முழுவதும் இருக்கும் பெருந்தலைவர் காமராஜர் மீது அன்பு கொண்டவர்கள் அனைவரையும் ஜாதி மதம் பாராமல் கடந்து ஒன்று திரட்டி காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி, காமராஜர் பெயரில் தனிக்கட்சித் தொடங்கவும் தயங்கமாட்டோம் என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.