பற்றிய நெருப்பு.. தீயில் கருகிய 10 குழந்தைகள்.. உ.பியில் சோகம்!
Author: Hariharasudhan16 November 2024, 11:45 am
உத்தரப்பிரதேசம் ஜான்சியில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
ஜான்சி: உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சியில் மஹாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு உள்ள குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் 54 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், நேற்று (நவ.15) இரவு 10.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தைத் தொடர்ந்து, உடனடியாக தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த 6 தீயணைப்புக் குழுவினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே, தீ விபத்தில் சிக்கி இருக்கும் குழந்தைகளை மீட்கும் பணியும் நடைபெற்றது.
இதில் 44 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் 10 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 7 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், மீதம் உள்ள குழந்தைகளின் அடையாளங்கள் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதாக் கூறி உள்ளார்.
அதேநேரம், தீ விபத்து நிகழ்ந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின்னழுத்தக் குறைவு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டதாகவும், அப்போது புறநோயாளிகளாக இருந்த குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், இது தொடர்பாக விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளதாகவும் ஜான்சி மாவட்ட மேஜிஸ்திரேட் அவினாஷ் குமார் கூறி உள்ளார்.
இதையும் படிங்க: அமரன் திரையிடப்பட்ட தியேட்டர் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு!
மேலும், “ஜான்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட விபத்தில் குழந்தைகள் உயிரிழந்தது மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மாக்களுக்கு சாந்தி கிடைக்கவும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் கடவுள் ஸ்ரீராமனைப் பிரார்த்திக்கிறேன்” என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.