நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு திமுகவால் விலக்கு பெற்றுத் தர முடியுமா…? உண்மையை உடைக்கும் தேமுதிக!

Author: Babu Lakshmanan
8 February 2022, 2:34 pm

மாநிலம் முழுவதும் வருகிற 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.

நீட் விலக்கு மசோதா

இந் நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி திமுக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி நிறைவேற்றிய சட்ட மசோதாவை ஆளுநர் ரவி, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மறுபரிசீலனை செய்யும்படி கடந்த 1-ம் தேதி திருப்பி அனுப்பி வைத்தது தமிழக அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

Neet CM And Governor- Updatenews360

நகர்ப்புறங்களில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தல் என்பதால் இது தற்போது பேசு பொருளாகவும், பிரச்சார ஆயுதமாகவும் அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், தேமுதிக போன்ற எதிர்க்கட்சிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இது தேர்தலில் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை இன்று கூட்டி, மிகவும் வலிமையான முறையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் இரண்டாம் சட்ட மசோதாவை நிறைவேற்றி இருக்கிறார். அது ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மக்களை முட்டாளாக்குகின்றனர்

இந்த நிலையில் சென்னையை அடுத்த புழலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறும்போது “பணபலம், ஆட்சி பலம், அதிகார பலத்தை எதிர்த்து நாங்கள் போட்டியிடுகிறோம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பது ஆளுங்கட்சியினுடைய பணம், ஆட்சி, அதிகாரம் என அனைத்து பலத்தையும் எதிர்த்து உண்மை, நேர்மை, லட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு தேமுதிக, மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறது. ஆட்சியில் இருப்பவர்களுக்கு அதிகாரம் இருக்கிற மாதிரி தெரியும், ஆட்சியில் இல்லாதவர்கள் அதிகாரமற்றவர்கள் போலத் தெரியும்.

எப்படியிருப்பினும் உறுதியாக கேப்டனுக்கும், எங்கள் வேட்பாளர்களுக்கும் மக்கள் வாக்களித்து மாபெரும் வெற்றி வாய்ப்பை கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.  தமிழ்நாட்டிற்கு நீட் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்பதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு. ஆனால், திமுகவும், அதிமுகவும் இதை மிகப் பெரிய அரசியலாக ஆக்குகிறார்கள். 

Premalatha 01 updatenews360

ஏற்கனவே அதிமுக ஆட்சியில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், அது குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில்தான் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மீண்டும் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதுவும் தற்போது திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்துக்கு விலக்குபெறும் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது என்று பலர் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றனர். இது தெரிந்திருந்தும் அதிமுகவும், திமுகவும் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு விஜயகாந்த் பரப்புரை செய்வது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் “என்று குறிப்பிட்டார்.

நீட் ரத்து ரகசியம் என்னாச்சு..?

இது ஒருபுறமிருக்க, இன்னொரு பக்கம் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், விருதுநகரில் செய்தியாளரிடம் பேசும்போது, “கடந்த ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, பிரச்சாரத்தின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அளித்த வாக்குறுதியை கடுமையாக கிண்டல் செய்துள்ளார்.

இதுபற்றி மாஃபா பாண்டியராஜன் விமர்சிக்கையில், “9 மாதங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு ரகசிய மந்திரம் இருக்கிறது என கூறிய உதயநிதி தற்போது துபாயில் இருக்கிறார். ஒற்றை செங்கலை கையில் வைத்துக்கொண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வுக்கு எதிராகத்தான் இருக்கும் என அப்போது உதயநிதி கூறினார்.

உச்சநீதிமன்ற உத்தரவு இருக்கும் போது எப்படி நீங்கள் அதை செய்வீர்கள்? என கேட்டதற்கு எங்களிடம் ரகசிய திட்டம் இருக்கிறது எனக் கூறிய உதயநிதி இப்போது எங்கே இருக்கிறார்?… அப்போது தெரியவில்லையா? ஆளுநர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு எதையும் திருப்பி அனுப்ப முடியும் என்ற அதிகாரம் உள்ளது, என்று தெரியாதா? இல்லாத விஷயங்களை இருப்பதாக கூறி எல்லாரையும் ஏமாற்றிய திமுக அரசு தற்போது ஏமாந்து நிற்கிறது.

mapa pandiayarajan - updatnews360

நீட் தேர்வை பொறுத்தவரை திமுக முழுக்க முழுக்க ஏமாற்று வேலை செய்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி மையத்தை மீண்டும் தொடங்குங்கள். நாங்கள் கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை முடிந்தால் 12.5 சதவீதமாக அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். அதில், அரசு உதவி பெறும் பள்ளிகளையும் கொண்டு வாருங்கள்” என்று அதிரடி காட்டினார்.

ஆளுநரின்அடுத்த மூவ்

இப்படி நீட் தேர்வு குறித்து பல்வேறு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க கோரும் சட்ட மசோதாவை திமுக அரசு மீண்டும் நிறைவேற்றி இருப்பது பற்றி, டெல்லியில் அரசியல் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கும்போது, “ஆளுநர் மறுபரிசீலனை செய்யும்படி கூறி இருப்பதன் அடிப்படையில் திமுக அரசு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, 2-வது புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ளது.

ஆனால், இந்த சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று தமிழக ஆளுநர் குறிப்பிட்டதற்கு முக்கிய காரணம், நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது, கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி ஏழை மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டிருந்ததுதான்.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவைக் கூட ஏதாவது ஒரு காரணத்தைக் குறிப்பிட்டு ஆளுநர் மீண்டும் திமுக அரசுக்கு அனுப்பி வைக்க வாய்ப்புள்ளது என்ற போதிலும், அதை அவர் நிச்சயம் செய்ய மாட்டார். சட்ட மசோதாவை விரிவாக ஆய்வு செய்து பின்னர் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்பி வைக்கலாம்.

உச்சநீதிமன்றம்

அதன்மீது குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்கலாம். இல்லையென்றால் அப்படியே கிடப்பிலும் போடலாம். நீட் தேர்வு தொடர்பான விவகாரம் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்பதால் அதைக் காரணம் காட்டி, நிராகரித்து தமிழக அரசுக்கே மீண்டும் அனுப்பி வைக்கும் வாய்ப்புகளும் அதிகம்.

Supreme_Court_UpdateNews360

ஒருவேளை புதிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தால் அதற்கு எதிராக யாராவது சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல நேர்ந்து, அதன் மூலம் பணி நிறைவு செய்ய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தனக்கு தேவையற்ற நெருக்கடி ஏற்படுத்திக் கொள்வதை குடியரசுத் தலைவர் விரும்பமாட்டார்.

அதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி திமுக அரசு, சுப்ரீம் கோர்ட்டை நாடக் கூடிய நிலைதான் ஏற்படும். அப்படியொரு சூழல் உருவானால், சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஏற்கனவே, தான் 2017-ல் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமா? என்பதும் சந்தேகம்தான்” என்று அந்த அரசியல் சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1158

    0

    0