ஆளுநர் ரவியை திமுக வம்புக்கு இழுக்கிறதா…? டாக்டர் கிருஷ்ணசாமியால் வெடித்த புதிய சர்ச்சை!

Author: Babu Lakshmanan
4 February 2022, 5:30 pm

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கும் இடையே கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மறைமுகமாக நீடித்து வந்த மோதல் போக்கு தற்போது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நீட் விலக்கு மசோதா

குறிப்பாக, நீட் தேர்வில் இருந்து தமிழக பிளஸ் 2 மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்ட மசோதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் தேதி, அதாவது நாடு முழுவதும் அதற்கு முதல் நாளே நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ak rajan - neet - updatenews360

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வறிக்கையின்படி இந்த சட்டம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இச் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்ட ஆளுநர் ரவிக்கு அனுப்பியும் வைக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதியின்படி, முதல் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் சட்ட மசோதா நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது நீட் விவகாரத்தில் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு நடந்து கொள்வதாக ஆளுநர் ரவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மீண்டும் ஜெய்ஹிந்த்

இந்தநிலையில் 2022-ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் 5-ம் தேதி ஆளுநர் உரையுடன் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அப்போது தனது உரையை ஆளுநர் ரவி நிறைவு செய்தபோது ‘ஜெய்ஹிந்த்’ என்று வீர வணக்கம் கூறி அதிரடி காட்டினார். இது அப்போது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஏனென்றால் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், சட்டப் பேரவையில் ஜெய் ஹிந்த் என்று கூறி தனது உரையை நிறைவு செய்யாதது, திமுக கூட்டணி கட்சியினரால் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தது, திமுக அரசுக்கு
கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.

சீண்டிய திமுக

இதைத்தொடர்ந்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் தமிழக ஆளுநரை மறைமுகமாக கண்டிக்கும் விதமாக “கொக்கென்று நினைத்தாயோ” என்ற தலைப்பில் சிலந்தி என்னும் பெயரில் கடந்த வாரம் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.

அப்போது இதற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, “உங்கள் தலைகளுக்கு மேலே 356 என்ற கொக்கி இருக்கிறது என்பதை மட்டும் மறந்து விட வேண்டாம். ஆளுநர் இந்திய அரசியல் சாசனத்தில் அதிகாரப்பூர்வ அதிபர். அவர்தான் 8 கோடி தமிழ் மக்களுடைய பாதுகாவலர்.

ஆளுநர் மீதான அவதூறு பிரச்சாரம் ஆட்சிக்கு ஆபத்தை உண்டாக்கும். திமுக வேதாளம், மீண்டும் முருங்கை மரம் ஏற வேண்டாம். 356 கொக்கு காத்திருக்கிறது” என்று கிண்டலாக குறிப்பிட்டிருந்தார்.

கிருஷ்ணசாமி ஆதரவு

இந்தநிலையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவை சபாநாயகரின் மறுபரிசீலனைக்கு ஆளுநர் ரவி அனுப்பி வைத்திருப்பது, தமிழக அரசியல் களத்தில் புதிய புயலைக் கிளப்பி விட்டிருக்கிறது.

இதற்கு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையான ஆட்சேபம் தெரிவிக்க பாஜகவின் கூட்டணிக் கட்சியான புதிய தமிழகத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக ஆளுநர் ரவி எடுத்த நடவடிக்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “தமிழக சட்டப் பேரவையில் திமுக அரசு நிறைவேற்றி அனுப்பிய நீட் தேர்வு ரத்து குறித்த தீர்மானம், சட்டப் பேரவை சபாநாயகருக்கே திருப்பி அனுப்பி விடப்பட்டதாக ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. சமூகநீதிக் கொம்பர்கள், ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என தங்களை மார்தட்டிக் கொள்ளும் திராவிட ஸ்டாக்கிஸ்ட்டுகள், 1-ம் தேதியே ஆளுநரால், திருப்பி அனுப்பப்பட்ட மசோதா குறித்து ஏன் வாய்திறக்கவில்லை? என்று தெரியவில்லை.

இவர்களிடம் வெளிப்படைத் தன்மை உண்மையிலேயே இருந்திருக்குமேயானால், ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட அந்த நீட் மசோதா குறித்து தமிழக மக்களுக்கு அப்போதே இவர்கள் தெரிவித்து இருக்கவேண்டும்.

இதில் கூட ஆளுநர் ஜனநாயக பூர்வமாக நடந்திருக்கிறார். அரசியல் காரணங்களுக்காக வெளியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி, அதை தொடர்ந்து சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் ஆகியவற்றை ஆளுநர் அவசர கோலத்தில் பரிசீலனை செய்ய இயலாது.

திமுக தொடர்ந்து இதில் வீண் வம்பு செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது தெரியவில்லை. தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட அனைத்துத் தீர்மானங்களுக்கும் ஆளுநரும், குடியரசு தலைவரும் ஒப்புதல் அளிக்க வேண்டுமென இவர்கள் கருதக்கூடாது.

அப்படி கருதுவார்களேயானால், 1974-ம் ஆண்டு இதே தமிழக சட்டப் பேரவையில் இவர்கள் ஆட்சியில் ‘மாநில சுயாட்சி’ குறித்து நிறைவேற்றிய தீர்மானத்தின் கதி என்ன? கடந்த 47 ஆண்டு காலத்தில் அதை நிறைவேற்றுவதற்கு இவர்கள் எடுத்த முயற்சி என்ன? என்பதை இவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும்.

இனியாவது திமுக தன் இயலாமையை முழுமையாக ஒப்புக்கொண்டு தமிழகப் பாடத்திட்டத்திலும், புதிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். மாணவர்களையும் அதை எதிர்கொள்ள தயார் செய்திட வேண்டும்.

இவர்கள் போட்ட தூபத்தால் ஏற்கெனவே 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுடைய இன்னுயிரை நீத்ததாக இவர்களே சொல்கிறார்கள். அரசியல் லாபத்திற்காக எந்த பாவத்திற்கும், பழிக்கும் இவர்கள் அஞ்சியதில்லைதான்.

ஒன்று, இன்றைய ஆட்சியாளர்கள் சொல்வதைப்போல நீட் தேர்வில் சமூகநீதிக்கு எந்தவிதமான குந்தகமும் வந்துவிடவில்லை. மாறாக ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் உண்மையிலேயே பெரிதும் பயன் பெற்று இருக்கிறார்கள் என்பதையும், இரண்டாவதாக சமூக நீதி குறித்து வேலூர் கிறிஸ்தவக் கல்லூரி எழுப்பிய பிரச்சினையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தெளிவுபடுத்தி இதில் தீர்ப்பும் வழங்கிவிட்டது என்பதையும் தமிழக ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் நடைபெற வாய்ப்பு இல்லாத ஒன்றைத் திருப்பித் திருப்பி ஏழை, எளிய மக்களிடத்தில் பிரச்சாரம் செய்து தவறான நம்பிக்கையூட்டுவது மிகப்பெரிய குற்றம் ஆகும். தமிழகத்திற்கு நீட் விலக்கு என்பது இயலவே இயலாத காரியம். அது முடிந்து போன விஷயம்.

ஆளுநரோடு மோதல் போக்கு என்பது வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அது அரசு இயந்திரத்தை முற்றாக முடக்கி போடக் கூடும். அதிகாரிகள், அமைச்சர்கள், முதலமைச்சர் என அனைவரது நடவடிக்கைகளும் கிரீஸ் இல்லாத வண்டியை போல ஜாம் ஆகும்” என்று டாக்டர் கிருஷ்ணசாமி அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்

இதுகுறித்து அரசியல் ஆர்வலர்கள் கூறும்போது, “தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து கடந்த 1-ம் தேதியே நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்யும்படி கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதன் பிறகு இரண்டு நாள் கழித்துதான் அரசு விழித்துக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஒரு விஷயம் மட்டும் நன்கு புரிகிறது, ஆளுநர் மாளிகையில் இருந்து தெரிவிக்கப்படும் முக்கிய தகவல்களை அரசு உயர் அதிகாரிகள் உடனுக்குடன் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்பவில்லை என்பதுதான் அது. அல்லது இந்த விஷயத்தை அவர்கள் பெரியதாக கருதவில்லை என்று கூட எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இதனால்தான் இந்த 2 நாள் இடைவெளி பற்றி தமிழக பாஜகவினரும், அவருடைய கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கேலியாக கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

அரசு பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற ஏழை மாணவர்கள் நீட் தேர்வை சிறப்பாக எழுதுவதற்குரிய கட்டமைப்பு வசதிகளை திமுக அரசு செய்து கொடுக்கவேண்டும். அதுமட்டுமின்றி, நீட் தேர்வு இல்லாத 10 ஆண்டுகளில் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படிக்க அரசு பள்ளி மாணவ, மாணவிகள், எத்தனை பேருக்கு இடம் கிடைத்தது?… தனியார் பள்ளி மாணவர்கள் எவ்வளவு பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர்?… என்று தமிழக பாஜக வெள்ளை அறிக்கை கேட்பதற்கும் திமுக அரசு பதில் அளிக்க முன்வர வேண்டும். அதைவிட மிக முக்கியமாக வரும் ஆண்டில் தமிழகத்தில் நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்பது பற்றி திமுக அரசு வெளிப்படையாக அறிவிக்கவேண்டும்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக தலைவர்கள் பிரசாரத்தில் முழங்கியது போல நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று என கூறக்கூடாது.

ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக அரசு கொண்டு வந்த மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் கடந்தாண்டு அரசுப்பள்ளி ஏழை மாணவர்கள் 407 பேருக்கும், இந்தாண்டு 536 ஏழை மாணவர்களுக்கும் எம்பிபிஎஸ் சேர்ந்து படிக்க இடம் கிடைத்துள்ளது”
என்று அந்த அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

  • Squid Game 2 Today Release timing on Netflix இன்று வெளியாகும் SQUID GAME 2…. எத்தனை எபிசோடுகள் தெரியுமா?
  • Views: - 1210

    0

    0