மலைக்கும், மடுவுக்குமான வேறுபாடு… இருவரையும் மோத விடலாமா..? தமிழகத்திற்காவது விலக்கு கொடுங்க… அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
17 June 2023, 12:48 pm

நீட் தேர்வு நாடு முழுவதும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது; பணக்கார, நகர்ப்புற மாணவர்களுக்கு சாதகமானது என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் குற்றச்சாட்டு மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களின் பின்னணி குறித்த ஆய்வில் அத்தேர்வு ஏழை மாணவர்களால் எட்டிப்பிடிக்க முடியாதது என்பது உறுதியாகியுள்ளது. முதல் 50 இடங்களுக்குள் வந்தவர்களில் சுமார் 74 விழுக்காட்டினர் சி.பி.எஸ்.சி. பாடத்திட்ட பள்ளிகளில் படித்தவர்கள். 13 சதவீதம் ஆந்திர பாடத்திட்டம், 8 சதவீதம் மராட்டிய பாடத்திட்டம், 5 சதவீதம் மேற்கு வங்க பாடத்திட்டத்தில் படித்தவர்கள்.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் உள்ளிட்ட பெரும் பான்மையான பிற பாடத் திட்டங்களுக்கு பிரதிநிதித்துவமே இல்லை. எல்லா மாணவர்களும் பணக்காரர்கள், 74 விழுக்காட்டினர் உயர் சாதிகளைச் சேர்ந்தவர்கள், அனைவரும் நகரப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள், 98 விழுக்காட்டினர் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். இப்படியாக சாதித்தவர்களுக்கும், சாதிக்க முடியாதவர்களுக்கும் இடையே மலைக்கும், மடுவுக்குமான வேறுபாடு இருக்கும் நிலையில், இருவரையும் மோத விடுவது நியாயமா? மருத்துவம் படிக்க வருவோர் அனைவரும் ஒரே மாதிரியான அளவு கோலால் அளவிடப்பட வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது சரி என்றால், நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களின் சமூக, பொருளாதார, கல்வி வாய்ப்புகளும் ஒரே மாதிரியாக இருப்பதுதானே சரியானதாக இருக்கும்?

அவ்வாறு இல்லாமல் வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கு போட்டி நடத்தினால், கல்வி வாய்ப்பிலும், பொருளா தாரத்திலும் சிறந்தவர்கள் தானே வெற்றி பெறுவார்கள்? அது தானே இப்போது நடந்திருக்கிறது? இது எந்த வகையில் சமூக நீதியாகவும், சமநீதியாகவும் இருக்கும்? என்பதை அரசு விளக்க வேண்டும். சம வாய்ப்பை வழங்காத, சி.பி.எஸ்.இ பாடத்திட்ட, தனிப்பயிற்சி பெறும், நகர்ப்புற, பணக்கார, உயர் வகுப்பினருக்கு சாதகமாக இருக்கும் நீட் தேர்வு எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது.

எனவே, நீட் தேர்வு நாடு முழுவதும் ரத்து செய்யப்பட வேண்டும். குறைந்தபட்சம் சமவாய்ப்பற்ற நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும், எனக் கூறினார்.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?