இனியும் நம்பி பயனில்லை… நீட் தேர்வு மீது அதிகரிக்கும் தமிழக மாணவர்களின் ஆர்வம்… திமுக அரசு மீது நம்பிக்கை குறைகிறதா…?
Author: Babu Lakshmanan18 July 2022, 1:33 pm
நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம். அதில் பெறும் கட் -ஆப் மதிப்பெண்ணை கொண்டே மருத்துவ மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
2வது முறை நீட் தேர்வு
தமிழக மாணவர்களை பொறுத்தவரை 2017 முதல் நீட் தேர்வை எழுதி வருகின்றனர். இதனால் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்படும் நடைமுறை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போனது.
இந்த நிலையில்தான் 2022-23ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. தேர்வை எழுத நாடு முழுவதும் விண்ணப்பித்து இருந்த 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேரில் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 மாணவர்கள் தேர்வை எழுதி இருக்கின்றனர்.
அகில இந்திய அளவில் ஒட்டு மொத்தமாக 95 சதவீதம் பேரும், தமிழகத்தில் 91 சதவீத தேர்வர்களும் நீட் தேர்வை உற்சாகத்துடன் எழுதியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாநிலத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட 18 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 59 மையங்களில் தேர்வு நடந்தது.
தமிழகத்தில் மட்டும் தேர்வை எழுத விண்ணப்பித்த 1 லட்சத்து 42 ஆயிரம் பேரில் சுமார் 1 லட்சத்து 31 ஆயிரம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தலைநகர் சென்னையில்
33 மையங்களில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வு எழுதினார்கள்.
கட்டுப்பாடுகள்
மதியம் 2 மணிக்குத்தான் தேர்வு என்றாலும் கூட பல மையங்களில் நண்பகல் 11 மணி அளவில் இருந்தே ஹால் டிக்கெட் சரிபார்க்கப்பட்டு பயோமெட்ரிக் முறையில்
1.30 மணி வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது கொரோனா தொற்று இருப்பதால், தேர்வர்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அங்கேயே அவர்களுக்கு முகக்கவசமும் வழங்கப்பட்டது.
தவிர தேர்வர்கள் ஆதார் கார்டு ஒரிஜினல், விண்ணப்பப்படிவம், மேக்ஸி சைஸ் போட்டோ, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, தண்ணீர், 50 மிலி சானிடைசர் ஆகியவற்றை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால் கைக்கடிகாரம், புத்தகங்கள், காகித துண்டுகள், செல்போன், புளுடூத், ஹெட்போன், கேமரா, கால்குலேட்டர் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள் தோடு, கம்மல், காப்பு, செயின், கொலுசு, துப்பட்டா, மூக்குத்தி, கூந்தலில் அணியும் கிளிப் ஆகியவற்றை கழற்றிய பின்புதான் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோல் மாணவர்கள் பணப்பை, கண்ணாடி, கைப்பை, பெல்ட், தொப்பி, ஷூ போன்றவற்றை அணிந்து வர அனுமதிக்கப்படவில்லை. முழுக்கை சட்டை அணிந்து வரக்கூடாது என்றும் அறிவுரை, வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டு இருந்தது.
என்னதான் வழி காட்டும் நெறி முறைகள் வகுக்கப்பட்டு இருந்தாலும் பல தேர்வு மையங்களில் மாணவிகள் தோடு, மூக்குத்தி, கம்மல் கொலுசு அணிந்து வந்த காட்சிகளையும் பார்க்க முடிந்தது. குறிப்பாக புதுக்கோட்டை நகர மையத்தில் பல மாணவிகள் தங்க நகைகளை அணிந்து வந்தனர். அவர்கள் அந்த ஆபரணங்களை கழற்றிய பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்களின் சட்டை அரைக்கையாக மாற்றப்பட்ட பின்பே, தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்ட காட்சிகளும் சில மையங்களில் அரங்கேறின.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மையத்தில் ஒரு மாணவியின் மூக்குத்தியைக் கழற்றும்போது, சிக்கல் ஏற்பட்டதால் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. இதனால் அருகில் உள்ள ஒரு அடகு கடைக்கு அந்த மாணவி அழைத்துச் செல்லப்பட்டு அவருடைய மூக்குத்தி கழற்றப்பட்டது.
வயது தடையல்ல
அறந்தாங்கியில் தேர்வர்களுக்கு முதலில் கொடுக்கப்பட்ட வினாத்தாள் 20 நிமிடங்களுக்கு பிறகு திரும்ப பெறப்பட்டு, வேறு வினாத்தாள் வழங்கப்பட்டதாக ஒரு சர்ச்சை எழுந்தது.
நீட் தேர்வை எழுதுவதற்கு வயது வரம்பு இல்லை என்பதால் 50 வயதை கடந்தவர்கள் சிலரும் மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினர். திருவாரூர் தேர்வு மையத்தில் 50 வயது தந்தையும், அவருடைய மகனும், தஞ்சையில் 28 டிகிரிகளை முடித்துள்ளதாக கூறப்படும் 68 வயது முதியவர் ராமலிங்கம் என்பவரும் ஆர்வமுடன் நீட் எழுத வந்ததும் சுவாரஸ்யமான காட்சிகள்.
மதுரையைச் சேர்ந்த 56 வயது விவசாயி ராஜ்யகோடி என்பவரும் தேர்வு எழுத வந்திருந்தார். அவருடைய இளம் வயது கனவு டாக்டராக வேண்டும் என்பதாம். 32 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. பணம் வசதி இல்லாததால் அப்போது சேர முடியவில்லை என்பதால் இப்போது நீட் எழுத வந்திருப்பதாக தெரிவித்தார். அவர் கூறிய இன்னொரு ருசிகர தகவல், அரசு பள்ளியில் படித்த அவருடைய மகனுக்கு கடந்த ஆண்டு அரசு மருத்துவ கல்லூரியில் சேர இடம் கிடைத்ததுதான்.
மாணவர்கள் ஆர்வம்
அதே நேரம் கள்ளக்குறிச்சி அருகே நேற்று காலை நடந்த கலவரத்தால் பஸ் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டு சில நூறு மாணவர்கள் உரிய நேரத்தில் நீட் தேர்வு மையத்திற்கு செல்ல முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
எப்படி பார்த்தாலும் கடந்தாண்டை விட இந்த வருடம் நீட் தேர்வு எழுதிய தமிழக தேர்வர்களின் எண்ணிக்கை சுமார் 23 ஆயிரம் அதிகமாக இருந்தது. இதற்கு என்ன காரணம் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
சென்ற ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்தபோது, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையே நீட் தேர்வை ரத்து செய்வதுதான் என்று திமுக தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அதேபோல தேர்தலில் வெற்றி பெற்று திமுகவும் ஆட்சி அமைத்தது. அதனால் நீட்தேர்வு ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கையில் ஏராளமான மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்கின்றனர்.
மொத்தமே ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் கடந்த ஆண்டு விண்ணப்பித்து 1 லட்சத்து 8 ஆயிரம் மாணவர்கள் மட்டும் தேர்வை எழுதியிருந்தனர். அதிலும் குறிப்பாக தனியார் பள்ளி மாணவர்கள் பெரும்பாலானோர் திமுகவின் வாக்குறுதியை அப்படியே நம்பியதால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லையே என்ற நிலையில்தான், இந்த ஆண்டு கூடுதலாக 32 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்து அவர்களில் 23 ஆயிரம் பேர் தேர்வை எழுதியும் இருக்கிறார்கள் என்ற பேச்சும் கல்வியாளர்கள் வட்டத்தில் உள்ளது.
குறைந்த நம்பிக்கை
இது தொடர்பாக அவர்கள் கூறும்போது,”தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. உயிரை மாய்த்து கொள்வது தீர்வாக அமையாது என்கிறார். நல்ல அறிவுரைதான். அதே போல் மாணவர்கள் நீட் தேர்வில் கலந்து கொள்வது தற்போதைய சூழலில் அவசியம் ஆகும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழக முதலமைச்சர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.
மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அரசு உறுதிப்படுத்தி உள்ளது. மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் பலமுறை முயற்சித்தும் கூட தேர்வில் வெற்றி பெற முடியும். நீட் தேர்வு குறித்து யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. என்றும் அமைச்சர் கூறுகிறார். அவர் சொல்வதைப் பார்த்தால் தமிழகத்திற்கு நீட்தேர்வில் இருந்து விலக்கு கிடைக்க இன்னும் சில வருடங்கள் ஆகலாம் என்றே கருதத் தோன்றுகிறது.
அதனால் திமுகவின் நீட் ரத்து தேர்வு வாக்குறுதியை நம்பாத மாணவர்கள் அடுத்தாண்டு இதைவிட இன்னும் பெரும் எண்ணிக்கையில் தேர்வு எழுத ஆர்வம் காட்டுவார்கள் என்பது நிச்சயம்.
தவிர இனி ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டேதான் போகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களிடம் நீட்தேர்வு பயமும் நீங்கி விடும். அதனால் நீட் தேர்வு எழுதும் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்”என்று அந்தக் கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
0
0