நாடு முழுவதும் இன்று நடக்கிறது நீட் தேர்வு : தமிழகத்தில் இருந்து மட்டும் 1.42 லட்சம் பேர் பங்கேற்பு
Author: Babu Lakshmanan17 July 2022, 10:23 am
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடக்கிறது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படுகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்க அளிக்க வேண்டும், 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 2022-23-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை நாடு முழுவதும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் எழுத இருக்கின்றனர். தமிழகத்தில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
வழக்கம் போல, இந்த ஆண்டும் ‘நீட்’ தேர்வு கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற உள்ளது. எனவே தேர்வர்கள் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் தவறாது பின்பற்ற வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.