நீட் வினாத்தாள் கசிவு மோசடி; எப்படி நடந்தது; புதிய தகவலை வெளியிட்டது சிபிஐ

Author: Sudha
26 July 2024, 1:09 pm

இந்த ஆண்டு மே மாதம் நடந்த இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வின்போது, வினாத்தாள் கசிவு உட்பட பல மோசடிகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் இந்த மோசடி நடந்துள்ளது உறுதியாகி உள்ளது.

நுழைவுத் தேர்வின்போது, வினாத்தாள் கசிவில் ஈடுபட்ட கும்பல் எப்படி செயல்பட்டது என்பது குறித்த புதிய தகவல்களை, சிபிஐ வெளியிட்டுள்ளது.

நீட் வினாத்தாள் மோசடியின் முக்கிய நபரான பங்கஜ் குமார் தேர்வு நடந்த ஒயாசிஸ் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் தேசிய தேர்வு முகமையின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஈஷானுள் ஹக்கையும் மற்றும் பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் இம்தியாஸ் ஆலமையும், தொடர்பு கொண்டுள்ளார். இவர்கள் மூவரும் இணைந்து, ஒயாசிஸ் பள்ளியில் மே, 5ம் தேதி தேர்வு அன்று காலை பாதுகாப்பு பெட்டியில் இருந்து வினாத்தாளை எடுத்து மொபைல் கேமராவில் படம் பிடித்துள்ளனர்.

பீஹாரின் சில பிரபலமான மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலரை, ஹசாரிபாகில் ஒரு இடத்தில் தங்க வைத்திருந்தனர். வினாத்தாள்களுக்கு அந்த மாணவர்கள் விடைகள் அளித்துள்ளனர்.தன் ஆட்கள் வாயிலாக, பணம் கொடுத்த, நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவை பகிரப்பட்டுள்ளன.

நீட் தேர்வுத்தாள் மோசடியில் ஈடுபட்டுள்ள பங்கஜ் குமார், தேர்வு நடந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் மற்றும் வினாக்களுக்கு விடை எழுதித் தந்த மாணவர்கள், அவற்றை விலைக்கு வாங்கிய மாணவர்கள் என, 35க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த தகவலை சிபிஐ வெளியிட்டுள்ளது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!