கையெழுத்து இயக்கமே வேஸ்ட்.. மீண்டும் மாணவியின் உயிரை பறித்த நீட் : மத்திய அரசுக்கு அன்புமணி அழுத்தம்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 October 2023, 11:49 am

கையெழுத்து இயக்கமே வேஸ்ட்.. மீண்டும் மாணவியின் உயிரை பறித்த நீட் : மத்திய அரசுக்கு அன்புமணி அழுத்தம்!!

நீட் தேர்வு அச்சத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு இரங்கல் தெரிவித்து உள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி உயிர்க்கொல்லி நீட்டுக்கு முடிவு கட்ட ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் எரவார் கிராமத்தைச் சேர்ந்த பைரவி என்ற அரசு பள்ளி மாணவி, நீட் தேர்வில் வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தில் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையும், வருத்தமும் அடைந்தேன்.

மாணவி பைரவியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடைபெறவிருக்கும் நாளுக்கு சிலநாட்கள் முன்பாகவும், நீட் தேர்வு நடைபெற்று முடிந்த சில நாட்களிலும் நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது வழக்கமானதாக இருந்தது.

ஆனால், இப்போது நீட் தேர்வுக்கு பல மாதங்கள் இருக்கும் நிலையிலேயே மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நீட் எனும் உயிர்க்கொல்லி தேர்வு, அதை எழுதும் காலத்தில் மட்டுமின்றி, எல்லா நாட்களிலும் மாணவர்களை அச்சத்திலும், அழுத்தத்திலும் வைத்திருக்கிறது என்பதை இந்த நிகழ்வு உறுதி செய்கிறது.

மாணவர்களைக் கொல்லும் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கம் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும்; மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்பது தான்.

இந்த இரு நோக்கங்களிலும் நீட் தேர்வு தோல்வி அடைந்து விட்ட நிலையில் அது தொடர்வது மாணவர்களுக்கும், மருத்துவக் கல்விக்கும் பெரும் கேடு. அது உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறும் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே கடமையைச் செய்யவில்லை. நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது என்பதால் தான், அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதற்காக 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்றப்பட்டது.

அதை ஆளுனரே திருப்பி அனுப்பிவிட்ட நிலையில், 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் நாள் அதே சட்டம் மீண்டும் இயற்றி, மே மாதத் தொடக்கத்தில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

நீட் விலக்கு சட்டம் பேரவையில் இயற்றப்பட்டு 22 மாதங்கள் நிறைவடைந்து விட்டன; அந்த சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு 19 மாதங்களாகி விட்டன. ஆனால், நீட் விலக்கு சட்டத்திற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்க வில்லை.

நீட் விலக்கு சட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்பதும், அதற்கு தமிழக அரசு விளக்கம் அளிப்பதுமாக சிக்கல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நீட் விலக்கு சிக்கலில் மத்திய அரசு இன்னும் முடிவெடுக்காதது கண்டிக்கத்தக்கது.

நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு தமிழக அரசு அரசியல் ரீதியிலான அழுத்தத்தைக் கொடுக்கவில்லை. நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் மத்திய அரசை பணிய வைக்க ஏராளமான அரசியல் ஆயுதங்கள் இருக்கும் நிலையில், அவற்றை விடுத்து கையெழுத்து இயக்கம் போன்றவற்றை நடத்துவதால் பயனில்லை.

எனவே, தமிழக அரசு மத்திய அரசுக்கு கடுமையான அரசியல் அழுத்தத்தைக் கொடுத்து நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும்.

மத்திய அரசும் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து தமிழக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ
  • Close menu