நெல்லை மேயருக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி… காற்றில் பறந்த உதயநிதியின் ‘அட்வைஸ்’… கொந்தளிப்பின் உச்சத்தில் திமுக!
Author: Babu Lakshmanan31 January 2024, 9:52 pm
திமுகவின் இளைஞர் அணி செயலாளரும், தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதியின் பேச்சை திமுகவினர் யாருமே ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை என்பதை அக்கட்சியில் நடக்கும் சமீபகால நிகழ்வுகள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
தவிர, அவர் சார்ந்த சினிமா துறையும் அவருக்கு கை கொடுத்ததாக தெரியவில்லை.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6ம் தேதி சென்னை கிண்டியில் நடத்தப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு விழா முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் பெரும் அதிர்ச்சி தருவதாகவே அமைந்திருந்தது.
25 ஆயிரம் பேர் விழாவை காண திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்
இரண்டு ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே வந்திருந்தனர். இதனால் 18 ஆயிரம் நாற்காலிகள் காலியாக கிடந்தன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இத்தனைக்கும் 12 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் வலம் வரும் உதயநிதி 15 படங்களில் நடித்தும் உள்ளார். அப்படி இருந்தும் கூட அவருடைய தாத்தா கருணாநிதிக்காக நடத்திய நூற்றாண்டு விழாவிற்கு அவரால் பெரிய அளவில் கூட்டத்தை திரட்ட முடியவில்லை என்ற விமர்சனம் பொதுவெளியில் வைக்கப்பட்டது.
அதற்கடுத்து இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டு ஜனவரி 21ம் தேதி சேலத்தில் நடந்த திமுக இளைஞர் அணி மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியபோது முப்பதாயிரம் நாற்காலிகள் காலியாக கிடந்ததாக சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ அரசியல் வட்டாரத்தில் பலத்த சலசலப்பையும் ஏற்படுத்தியது. இத்தனைக்கும் திமுக இளைஞரணியின் செயலாளராக அவர்தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார்.
இதற்கிடையே நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 38 பேர் திடீரென போர்க்கொடி உயர்த்தி அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானமும் கொண்டு வந்தனர். அதன் மீது கடந்த 12 ம் தேதி வாக்கெடுப்பு நடப்பதாக இருந்தது.
ஆனால் அமைச்சர் உதயநிதியின் தீவிர ஆதரவாளரான சரவணன், இந்த விவகாரத்தை நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் எடுத்துச் செல்ல அவரோ “தமிழக முதலமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால், அது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். எனவே வாக்கெடுப்பில் யாரும் கலந்துகொள்ளக் கூடாது’ என்று எச்சரிக்க அப்போது வாக்கெடுப்பை நடத்த முடியாதபடி சாதுர்யமாக தடுத்து விட்டார், சரவணன்.
இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் மேயர் சரவணனுக்கு எதிர்ப்பு தெரிவித்த 38 திமுக கவுன்சிலர்களும் வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டிருந்த ஜனவரி 12ம் தேதி அன்று பல்வேறு இடங்களுக்கு சொகுசு வேன்கள் மூலம் மகிழ்ச்சி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டதுதான்.
என்னடா இது திமுகவுக்கு வந்த சோதனை என்று அறிவாலயம் வேதனைப்பட்ட நிலையில்தான் சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாநகராட்சியிலும் திமுக மேயர் சுந்தரி ராஜாவுக்கு எதிராக அக்கட்சியின் கவுன்சிலர்களே கொந்தளித்து எழுந்தனர். தங்கள் பகுதியில் எந்தவொரு மக்கள் நலத்திட்டமும் செயல் படுத்தப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்து 10 உறுப்பினர்கள் மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளித்து நெருக்கடியும் கொடுத்தனர்.
அதில் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த கட்டமாக கவுன்சிலர் பதவிகளை ராஜினாமா செய்வோம் என்று அந்த பத்து பேரும் அதிரடியாக அறிவித்து திமுக தலைமைக்கு அதிர்ச்சியும் அளித்தனர்.
அதேநேரம் நெல்லை மாநகராட்சியில் திமுக மேயர் சரவணனுக்கு, தான் சார்ந்த கட்சி கவுன்சிலர்களாலேயே பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
வாக்கெடுப்பு நடக்காத நிலையில் 102 தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக நெல்லை மாநகராட்சியின் அவசரக் கூட்டம், ஜனவரி 30ம் தேதியான நேற்று நடந்தது. மாலை 4.30 மணிக்கு தொடங்கிய இக் கூட்டம் 4 மணி நேரத்திற்கும் மேலாக இரவு 9 மணி வரை நீடித்தது.
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே திமுக பெண் கவுன்சிலர்களான வசந்தா, இந்திரா, மேரி மூவரும் எங்களது வார்டுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. தவிர 10 நாட்களாக குப்பையும் அகற்றப்படாததால் வார்டுகளில் துர்நாற்றம் வீசுகிறது என்று கூறிக்கொண்டே தாங்கள் கையோடு எடுத்து வந்த குப்பைகளையும், ஓட்டுப் போட்ட மக்களை நன்றாக ஏமாற்றி விட்டீர்கள் என்பதை மறைமுகமாக குறிக்கும் விதமாக அல்வா பொட்டலம் ஒன்றையும் மேயரிடம் கொடுத்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினர்.
அதுமட்டுமின்றி அந்த மூன்று பெண் திமுக உறுப்பினர்களும் மேயர் அமர்ந்திருந்த மேஜைக்கு முன்பாக சிறிது நேரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பும் காட்டினர்.
இன்னும் சில திமுக கவுன்சிலர்கள் தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தாமல் அவற்றை நிறைவேற்றக்கூடாது என்று மேயர் சரவணனுடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் நெல்லை மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்கள் கட்சித் தலைமைக்கு எதிராக அதிருப்தி தெரிவிக்கும் விதமாக நடந்து கொண்டிருப்பது உதயநிதிக்கு தர்ம சங்கட நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இத்தனைக்கும் நெல்லை மாநகராட்சியின் அவசரக் கூட்டம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் அமைச்சர் உதயநிதி தலைமையில் அறிவாலயத்தில் நெல்லை மாநகர திமுக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
அப்போது அவர்களிடம் பேசிய உதயநிதி, “ஜனவரி 30-ம் தேதி நடைபெறும் நெல்லை மாநகராட்சி கூட்டம் எந்த பிரச்சினையும் இன்றி சமூகமாக நடத்தி முடிக்கப்பட வேண்டும். இல்லை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சி கடும் நடவடிக்கை எடுக்கும்”என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார். அப்படி இருந்தும் கூட நெல்லை மாநகராட்சியில் திமுகவின் மூன்று பெண் கவுன்சிலர்கள் உட்பட 10 பேர் வரை மேயர் சரவணனுக்கு எதிராக கொந்தளித்து இருப்பது திமுக தலைமைக்கு தலைவலியை கொடுத்துள்ளது என்றே சொல்லவேண்டும்.
தீர்த்து வைக்கப்பட்ட பிரச்சனை எப்படி மீண்டும் தலை தூக்கியது என்று தெரியாமல் திமுக குழம்பிப் போயும் உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நெல்லை மேயரை மாற்றி விட ஸ்டாலின் முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டாலும் கூட அதற்குள்ளாகவே நிலைமை மோசம் அடைந்துவிட்டது. திமுக கவுன்சிலர்கள் அனைவருமே தங்களது வார்டுகளில் எந்த அடிப்படை வசதியும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டைத்தான் முன் வைக்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணம், நாடாளுமன்ற தேர்தலின்போது தங்களது வார்டுகளுக்குள் சென்று வாக்காளர்களிடம் ஓட்டு சேகரிப்பது சிக்கலாகிவிடும் என்பதுதான். ஏனென்றால் மாநகராட்சி தேர்தலில் வார்டுகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நீங்கள் நிறைவேற்றினீர்களா என்ற கேள்வியைத்தான் பொதுமக்கள் முதலில் எழுப்புவார்கள் என்பது கவுன்சிலர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இந்தக் கேள்விகள் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலித்தால் நெல்லை தொகுதியில் திமுக கூட்டணி தோற்பதற்கு வாய்ப்பாகவும் அமைந்து விடும். அப்போது தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாகத்தான் திமுக கவுன்சிலர்கள் மேயர் சரவணனுக்கு எதிராக இப்போதே போர்க் கொடி உயர்த்தி உள்ளனர் என்பது வெளிப்படையாக தெரிகிற ஒன்று.
இத்தனைக்கும் நெல்லை மேயர், அமைச்சர் உதயநிதிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது திமுக கவுன்சிலர்களுக்கு நன்றாகவே தெரியும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16, 17 ம் தேதிகளில் நெல்லை மாவட்டத்தில் அதி கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி நெல்லை நகர மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்த நேரத்தில் மேயர் சரவணனோ சேலம் திமுக இளைஞரணி மாநாட்டிற்காக பந்தல் அமைக்கும் பணியை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அமைச்சர் கே என் நேரு, யோவ் உன் ஊருல வெள்ளம் ஓடுது நீ இங்க என்னய்யா பண்ணிக்கிட்டு இருக்க?… என்று சூடாக கேட்ட பிறகுதான் நெல்லைக்கே அவர் வந்தார். அதன் பிறகு இரண்டு மாதங்கள் ஆகப் போகிறது. இன்னும் அவருடைய மேயர் பதவி பறிக்கப்படவில்லை.
அதனால்தான் நெல்லை மாநகராட்சி கூட்டம் நடைபெறும் போதெல்லாம், மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் அதிரடியாக போராட்டத்தில் குதிக்கின்றனர் என்பதே எதார்த்தம்.
இதை திமுக தலைமை புரிந்து கொண்டதா? என்பதுதான் தெரியவில்லை.