‘நீங்க கம்முனு இருங்க..’ ஆவேசப்பட்ட திமுக எம்.பி.யிடம் அமைச்சர் கோபம்… சமாதானப்படுத்திய சபாநாயகர்…!!

Author: Babu Lakshmanan
13 July 2022, 9:52 pm

நெல்லை : குவாரிகள் மூடப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆவேசப்பட்ட திமுக எம்பியை அமைச்சர் மேடையில் கடிந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 14ம் தேதி அடைமிதிப்பான்குளம் தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட பாறைச்சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, விதிமீறல் தொடர்பான நடவடிக்கைகள் காரணமாக, அங்குள்ள 2 மாதங்களாக குவாரிகள் செயல்படாமல் இருந்து வருகின்றன.

இந்த நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பான நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், சபாநாயகர் அப்பாவு, நெல்லை ஆட்சியர் விஷ்ணு, தி.மு.க., எம்.பி. ஞானதிரவியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கணேசன், சபாநாயகர் அப்பாவு, திமுக எம்பி ஞானதிரவியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, குவாரி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளது குறித்து அமைச்சரிடம் கேள்வி கேட்டனர். இதற்கு, அமைச்சர் பதிலளிக்கையில், “இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தொழிலாளர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

அப்போது, குவாரிகள் திறப்பது குறித்து ஆட்சியர் பதில் கூற வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியதையடுத்து, ‘அரசின் பரிசீலனையில் உள்ளது. நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார். அப்போது, குறுக்கிட்ட திமுக எம்.பி., ஞானதிரவியம், ‘குவாரிகளை மூடி 60 நாட்கள் ஆச்சு. 50 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்’ என்றார்.

அந்த சமயம், ஆவேசமான குரலில், ‘இது குறித்து முதல்வரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அமைச்சர் சி. வி.கணேசன் பேசினார். அப்போது, ஞானதிரவியம் குறுக்கிட்டு பேசிய நிலையில், டென்ஷனான அமைச்சர், ‘அண்ணே… கம்முனு இருங்க.. இது என்ன ஊரா இது… கம்முனு இருங்க’ என திட்டினார்.

அரசு நிகழ்ச்சியில் அமைச்சரிடம் தி.மு.க., எம்.பி. ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 686

    0

    0