தூத்துக்குடி, நெல்லை மக்களுக்கு நிம்மதியான செய்தி… தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைவு ; மீட்பு பணிகள் தீவிரம்…!!!
Author: Babu Lakshmanan19 December 2023, 8:34 am
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, நெல்லை மக்களுக்கு நிம்மதியான செய்தி வெளியாகியுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக வரலாறு காணாத மழை பதிவாகியுள்ளது.
குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழந்து, தனித்தீவு போல காட்சியளிக்கின்றன. அதிலும், திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதீத மழை பதிவாகியுள்ளது.
இந்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பொதுமக்கள் பெரிய இழப்புகளை சந்தித்துள்ளனர். போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி மற்றும் நெல்லையின் கனமழை ஓய்ந்து, தற்போது லேசான மழை பெய்து வருகிறது. இது பொதுமக்களை நிம்மதியடையச் செய்துள்ளது.
கனமழை ஓய்ந்ததால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. அதேவேளையில், இரு மாவட்டங்களில் வெள்ளநீர் படிப்படியாக வடியத் தொடங்கியுள்ளது. இதனால், மக்கள் மனதில் நம்பிக்கை துளிரச் செய்துள்ளது.
0
0