பைக்கில் சென்ற இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு… குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு திரும்பிய போது நடந்த சம்பவம்!!
Author: Babu Lakshmanan21 November 2023, 4:07 pm
நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளிக்கு குழந்தையை விட வந்தபோது இளைஞர் மீது சரமாரியாக அறிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு நிலவியது.
நெல்லை டவுன் வயல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சக்தி (32), இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வருகிறார். இவரது குழந்தைகளை நெல்லை டவுன் பாரதியார் தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்க வைத்து வருகிறார். இன்றைய தினம் வழக்கமாக குழந்தைகளை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று விட்டு விட்டு, வீடு திரும்பியுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
இதனை கண்ட பகுதி மக்கள் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்த சக்தியை மீட்டு நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததுடன், நெல்லை டவுன் போலீசா இருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தவுடன் அரிவாள் வெட்டு சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்கள் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் ரியல் எஸ்டேட் பிரச்சனையும் காரணமாக நடைபெற்றதா அல்லது குடும்ப பிரச்சனையா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு மாணவர்கள் அதிகம் வரும் வேளையில் பள்ளி அருகே நடைபெற்ற அரிவாள் விட்டு சம்பவத்தால் நெல்லை டவுன் பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.