‘நெஞ்சுக்கு நீதி’படம் பார்க்க வருபவர்களுக்கு பிரியாணி… சிறந்த மக்கள் பணி… வாழ்க திராவிட மாடல் : திமுகவை கலாய்த்த சீமான்..!!
Author: Babu Lakshmanan23 May 2022, 6:15 pm
சென்னை : நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை பார்க்க வருபவர்களுக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பிரியாணி கொடுப்பதாகக் கூறி, திமுகவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்த பிறகு முதலமைச்சர் ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகிய முதல் படம் ‘நெஞ்சுக்கு நீதி’. எனவே, இந்தப் படத்தை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் பேனர்கள், ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்தப் படத்தை பெரும்பாலும் திமுக தொண்டர்கள் அதிகளவில் பார்த்து ரசித்து வரும் நிலையில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் உதயநிதியின் படத்தை திரையரங்கில் பார்ப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதனிடையே, நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை வாழ்த்தி பெரம்பலூரில் தமிழக காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் பேனர் வைத்ததும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் பெரும்பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு இலவச டிக்கெட்டும் கொடுத்து பிரியாணியும் போடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டள்ள டுவிட்டர் பதிவில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டி பதிவிடுகிறார்கள். டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள்… படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள். சிறப்பான மக்கள் பணி! வாழ்க திராவிட மாடல்!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
0
0