வெளியாகும் புதிய அறிவிப்பு? 5ஆம் தேதி பாஜகவின் முடிவை சொல்லும் அண்ணாமலை : அரசியல் களத்தில் பரபர!!!
Author: Udayachandran RadhaKrishnan3 October 2023, 6:14 pm
வெளியாகும் புதிய அறிவிப்பு? 5ஆம் தேதி பாஜகவின் முடிவை சொல்லும் அண்ணாமலை : அரசியல் களத்தில் பரபர!!!
தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் மட்டுமல்ல சட்டசபை தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று பகிரங்கமாகவே அறிவித்து விட்டது அதிமுக. ஒவ்வொரு முறையும் கூட்டணி இல்லை என்று உறுதி படுத்தி வருகிறது அதிமுக.
அதே நேரத்தில் அதிமுக உடனான கூட்டணியை பாஜக விரும்புகிறது. தொடர்ந்து பேசி வருவதாக கூறியுள்ளார் பாஜக துணைத்தலைவர் வி.பி. துரைசாமி. அதிமுக பாஜக கூட்டணி நீடிக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்றும் கூறியுள்ளார்.
கூட்டணி முறிவு பரபரப்புக்கு இடையே பாஜக தலைமையிடம் இருந்து வந்த அழைப்பினை ஏற்று டெல்லி சென்றுள்ளார் அண்ணாமலை. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரங்கள், அதிமுக உடனான கூட்டணி முறிவு மற்றும் என் மண் என் மக்கள் பாதயாத்திரை உள்ளிட்ட விவரங்கள் குறித்து விளக்கியதாக கூறப்படுகிறது.
அதே போல மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார் அண்ணாமலை. இந்நிலையில், இன்றைய தினம் அக்டோபர் 3ஆம் தேதி சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அண்ணாமலை தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதிமுக கூட்டணி முறிவுக்குப் பிறகு நடைபெற இருந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்பட்டிருந்தது.
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்றுள்ள நிலையில், இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளனர். அண்ணாமலை தலைமையிலான ஆலோசனைக்கூட்டம் சென்னை தி. நகரில் உள்ள கமலாலயத்தில் வரும் 5ஆம் தேதி வியாழக்கிழமையன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக உடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக கூறியுள்ள நிலையில் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறி வருகின்றனர் நிர்வாகிகள்.
இந்த நிலையில் நடைபெற உள்ள மாநில பாஜக உயர்மட்ட குழு கூட்டம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தப்படுமா? பாஜகவிற்கு புது கூட்டணி அமையுமா என்பது இன்றும் சில நாட்களில் தெரியவரும்.