திருமாவால் திமுகவுக்கு புதிய தலைவலி?… தெலுங்கானாவில் களமிறங்கிய விசிக!
Author: Udayachandran RadhaKrishnan4 மே 2024, 9:20 மணி
திருமாவால் திமுகவுக்கு புதிய தலைவலி?… தெலுங்கானாவில் களமிறங்கிய விசிக!
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக எடுத்துள்ள நிலைப்பாடு அரசியல் வட்டாரத்தில் விவாதத்துக்குரிய ஒன்றாகவே இருக்கிறது.
தமிழ்நாட்டில் திமுகவிடம் இரண்டு தனித் தொகுதிகளும் ஒரு பொது தொகுதியும் கேட்டு கடைசி வரை போராடியது. ஆனால் வழக்கம்போல் சிதம்பரம், விழுப்புரம் என இரண்டு தொகுதிகளை மட்டும் ஒதுக்கிய திமுக தலைமை பொதுத் தொகுதியை தர மறுத்துவிட்டது.
அதேநேரம் தேசியக் கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை மாற்றவேண்டும் என்பதற்காக கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, மராட்டிய மாநிலங்களில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று திருமாவளவன் கடந்த மார்ச் மாத இறுதியில் அதிரடி காட்டினார்.
ஆனால் அதிலும் அவர் உறுதியாக இருந்ததாக தெரியவில்லை. கர்நாடகாவில் அவருடைய கட்சி சார்பாக 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில் ஒருவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் விசிக தனித்து போட்டியிடும் பெங்களூரு ஊரகம் மற்றும் மத்திய தொகுதி, கோலார் ஆகிய தொகுதிகளில் திருமாவளவன் பிரச்சாரம் செய்வார் என அக்கட்சியினர் மிகவும் எதிர்பார்த்தனர். ஆனாலும்
கூட அவர்களுக்காக பிரச்சாரம் செய்வதை தவிர்த்து விட்டார்.
மாறாக அந்த மூன்று தொகுதிகளிலும் திடீரென்று காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து தனது கட்சி நிர்வாகிகளை அதிரவும் வைத்தார்.
கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே. சிவக்குமார் விசிகவால் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வி கண்டால் அது இண்டியா கூட்டணிக்கு பாதகமாக அமையும், அதனால் உங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் திருமாவளவன் விசிகவினர் போட்டியிட்ட தொகுதிப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.
“எங்களது வாக்குகள் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை பிரிக்கக் கூடியது. தற்போதைய சூழலில் காங்கிரஸின் வெற்றியே முக்கியம் என்பதால் எங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக நான் பிரச்சாரம் செய்யவில்லை. கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் என்னிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்ததால்
3 தொகுதிகளிலும் விசிகவுக்கு நான் பிரச்சாரம் செய்யவில்லை” என்று திருமாவளவன் ஒப்புக்கொள்ளவும் செய்தார்.
தவிர தனது வேட்பாளர்களிடம் நீங்கள் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று அவர் தடை விதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றினால் உங்களுக்கு அதிகாரமிக்கதொரு அமைச்சர் பதவியை பெற்றுத் தருகிறோம் என்று முதலமைச்சர் சித்தராமய்யா உறுதியளித்ததன் பேரில்தான் திருமாவளவன் கர்நாடகாவில் தனது கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யாமல் ஒதுங்கிக் கொண்டு விட்டார், என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் உள்ளது.
இந்த நிலையில்தான் தெலுங்கானா மாநிலத்தில் 7 நாடாளுமன்ற தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது. வருகிற 13-ம் தேதி அங்கு நான்காம் கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதில் ஆறு பேருக்கு பானை சின்னம் கிடைத்துள்ளது. ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இவர்களை ஆதரித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருமாவளவன் தீவிர பிரச்சாரமும் மேற்கொண்டார்.
இதை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்திலும் அவர் மகிழ்ச்சியோடு, “ஹைதராபாத் மாவட்டம் செகந்திராபாத் நாடாளுமன்றத் தொகுதியில் பேரணியாகச் சென்று பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தோம். தெலுங்கானா மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் ஜிலகர சீனிவாஸ், மச்ச தேவேந்திரா, தலைமை நிலையச் செயலாளர் பாலசிங்கம் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்” என்று கூறியிருந்தார்.
ஆனால் அந்த மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் விசிக தனித்து போட்டியிடுவது பற்றி கவலைப்பட்டது போலவே தெரியவில்லை. அதற்கு காரணம் கர்நாடக முதலமைச்சர் போல தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது எந்தப் பிடிப்பும் இல்லாதவர்.
மேலும் சந்திரசேகர ராவ் தெலுங்கானா முதலமைச்சராக இருந்தவரை திருமாவளவன் அவரைப் புகழ்ந்து தள்ளிக் கொண்டே இருந்தார். அவருடைய தெலுங்கானா ராஷ்டிர சமிதியுடன் கூட்டணி சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க விசிக தீவிர முயற்சி மேற்கொண்டதையும் அந்த மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் என்ற முறையிலும் ரேவந்த் ரெட்டி நன்றாக அறிவார்.
தவிர அண்மையில் ஒரு ஆங்கில டிவி செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த அவர் தமிழக அமைச்சர் உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அதற்காக அவருக்கு தக்க தண்டனையும் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
உதயநிதி போலவே திருமாவளவனும் சனாதனத்தை பற்றி கடுமையாக விமர்சித்துப் பேசக் கூடியவர்தான் என்பது ரேவந்த் ரெட்டிக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான், அவரிடம் உங்கள் வேட்பாளர்களை விலக்கிக் கொள்ளுங்கள் என்று தெலுங்கானா முதலமைச்சர் இதுவரை கேட்டுக் கொள்ளவில்லை. ஒருவேளை திருமாவளவனிடம் ஆதரவு கேட்டிருந்தால் காங்கிரசுக்கு வழக்கமாக கிடைக்கும் ஓட்டுகள் கூட கிடைக்காமல் போய் கட்சியின் வெற்றி வாய்ப்பை பெரிதும் பாதித்துவிடும் என்று ரேவந்த் ரெட்டி கருதி இருக்கலாம்.
“கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவும், துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரும் திருமாவளவனுக்கு பெரிய அளவில் மரியாதை கொடுத்தது போல தெலுங்கானா காங்கிரஸ் முதலமைச்சர் தரமாட்டார். அதற்கு வாய்ப்பே இல்லை” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
“ஏனென்றால் திருமாவளவனுக்கு, மறைந்த பகுஜன் சமாஜ் தலைவர் கன்ஷிராம் போல நாடு முழுவதும் அறியப்பட்ட ஒரு மிகப் பெரிய தலைவராக உருவாக வேண்டும் என்கிற எண்ணம் கடந்த சில ஆண்டுகளாகவே உள்ளது. அதற்காகத்தான் விசிகவை
தேசியக் கட்சியாக மாற்ற அவர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டும் வருகிறார். அவருக்கு இதில் பொருளாதார ரீதியாக ஏதும் சிக்கல் வந்து வரக்கூடாது என்பதற்காகவே பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனாவை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராகவும் சில மாதங்களுக்கு முன்பு திருமாவளவன் நியமிக்கவும் செய்தார்.
ஆனால் காங்கிரஸ் கேட்டுக்கொண்டால் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசாமல் மௌனமாகி விடுவதும், ஆதரவு கேட்காத மாநிலங்களில் காங்கிரஸுக்கு எதிராக வரிந்து கட்டுவதும் என்பது போன்ற நிலைப்பாட்டை ஒவ்வொரு மாநிலத்திற்கும் தகுந்தவாறு விசிக எடுத்தால் அது புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகத்தான் இருக்கும். தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் அவருடைய கட்சி வேட்பாளர்கள் டம்மி பீசு போலத்தான் பார்க்கப் படுவார்கள்.
தனது கட்சிக்கு 6 சதவீத வாக்கு வங்கி இருக்கும் என்று திருமாவளவன் நம்பினால் அதை அவர் தமிழகத்தில் முதலில் நிரூபித்து காட்ட வேண்டும். அதன் பிறகுதான் தேசிய கட்சி அந்தஸ்து என்ற அடுத்த கட்ட முயற்சிக்கு விசிக செல்லவேண்டும்.
கன்ஷிராமுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சியை நடத்தி வரும் மாயாவதி வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல் பல தேர்தல்களை தனித்தே சந்தித்து வருகிறார். அது போன்றதொரு நிலைப்பாட்டை திருமாவளவன் எடுத்தால்தான் தேசியக் கட்சி என்கிற இலக்கை எட்டிப்பிடிக்க முடியும்.
தமிழகத்தில் திமுகவிடம் தனது ஜம்பம் பலிக்கவில்லை என்ற காரணத்திற்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மராட்டிய மாநிலங்களில் விசிக வேண்டுமென்றே தனது வேட்பாளர்களை நாடாளுமன்றத் தேர்தலுக்கு நிறுத்துவது சரியான செயல் அல்ல.
ஏனென்றால் இண்டியா கூட்டணியில் பிரதான கட்சியாக திமுகதான் உள்ளது. அதனால் விசிக ஐந்தாறு மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்போது சம்பந்தப்பட்ட மாநிலங்களில் அந்தக் கட்சியால் ஏதாவது பாதிப்பு ஏற்படும் என்று காங்கிரஸ், மார்க்சிஸ்ட், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளின் தலைவர்கள் நினைத்தால் அதைத் திருமாவளவனிடம் நேரடியாக சொல்ல மாட்டார்கள். திமுக தலைவர் ஸ்டாலினிடம்தான் முதலில் முறையிடுவார்கள். அது திமுகவுக்கு தேவையில்லாத தலைவலி ஆகவும் அமைந்துவிடும்.
எனவே தேசியத் தலைவராக திருமாவளவன் உயர விரும்பினால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அத்தனை கட்சிகளுக்கும் எதிராக தனித்து களம் இறங்குவதுதான் எதிர்காலத்தில் அவருக்கு தகுந்த பலனைத் தரும். இல்லையென்றால் நானும் கச்சேரிக்கு போய் வந்தேன் என்ற கதையாகத்தான் அது இருக்கும்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
திருமாவளவன் தேசிய தலைவராக உருவெடுக்க விரும்புவது பலிக்குமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!
0
0