அன்று எதிர்ப்பு…! இன்றோ திடீர் ஆதரவு…? எடுபடுமா திருமாவளவனின் அரசியல் நாடகம்…?
Author: Babu Lakshmanan25 May 2023, 7:53 pm
வருகிற 28-ம் தேதி பிரதமர் மோடி டெல்லியில் திறந்து வைக்கவிருக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிட விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் விசிக உள்ளிட்ட19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்தக் கட்டிடத்தை பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முதான் திறந்து வைக்கவேண்டும் என்று முதலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குரல் எழுப்பினார். அதைத் தொடர்ந்து எதிரும் புதிருமாக உள்ள 19 எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து அதை கோரிக்கையாக மத்திய அரசிடம் வைத்தன. ஆனால் அது ஏற்கப்படவில்லை.
இந்த விவகாரத்தில் தேசியக் கட்சிகளுக்கு இணையாக விசிக தலைவர் திருமாவளவன் கொந்தளித்து அறிக்கை வெளியிட்டிருப்பதுதான் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. அது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாத பொருளாகவும் மாறி இருக்கிறது.
அவர் வெளியிட்ட அறிக்கை இதுதான்.
“நாடாளுமன்றத்தில் இரு அவைகளுக்கும் தலைவர், குடியரசுத் தலைவர்தான் என உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அவைகளில் விவாதித்து நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளித்தால்தான் அவை சட்டங்கள் ஆகும். ஆனால் அவரது பெயரைக் கூட அழைப்பிதழில் குறிப்பிடாமல் குடியரசுத் தலைவரை அவமதிக்கும் நோக்கில் நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெறுகிறது. பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவரை நாங்கள் குடியரசுத் தலைவராக ஆக்கி இருக்கிறோம் என்று தேர்தல் ஆதாயத்துக்காகப் பேசிய பாஜக, தற்போது அவரை ஓரங்கட்டுவதும் அவமதிப்பதும் அவர் பழங்குடியினத்தவர் என்பதால்தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது. குடியரசு தலைவரையும், நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளையும் அவமதிக்கும் வகையில் இந்தத் திறப்பு விழாவை நடத்தும் பாஜக அரசின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். அத்துடன், இந்தத் திறப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணிக்கிறோம்” என்று ஆவேசமாக பொங்கியுள்ளார்.
திமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுக்கும் விதமாக சில கிடுக்குப் பிடி கேள்விகளை எழுப்பி திணறடித்து இருக்கிறார். அது, முதலமைச்சர் ஸ்டாலின், திருமாவளவன் போன்ற தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கையில், “புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை
பிரதமர் திறந்து வைக்கலாமா, அது முறையா, குடியரசுத்தலைவர்தானே திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் புலம்பிக்கொண்டு இருக்கின்றனர் .
1975ம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தை திறந்து வைத்தது, 1987ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி நாடாளுமன்ற நூலகத்திற்கு அடிக்கல் நாட்டியது, 2010-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் தமிழக சட்டப்பேரவையின் புதிய கட்டிடத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா முன்னிலையில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தது, அண்மையில் தெலுங்கானா சட்டப்பேரவை புதிய கட்டிடம் மற்றும் புதிய தலைமை செயலகத்தை அந்த மாநிலத்தின் முதலமைச்சரே திறந்து வைத்ததோடு, அரசியலமைப்பு சட்டப்படி அம்மாநிலத்தின் மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை அழைக்காதது போன்ற நிகழ்வுகளை சுட்டி காண்பித்து அப்போதெல்லாம் குடியரசுத் தலைவர்களும், மாநில ஆளுநர்களும் உங்கள் நினைவிற்கு வரவில்லையா? இது நீங்கள் அவர்களை அவமானப்படுத்தியதாக தெரியவில்லையா?” என்று சாட்டையடி கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கடந்தாண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு முதல் முறையாக பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்மணியான திரௌபதி முர்முவை வேட்பாளராக நிறுத்தி அவரை எதிர்க்கட்சிகள் ஒரு மனதாக ஆதரிக்கவேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்தது.
ஆனால் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவையே ஆதரித்தன. அப்போது பழங்குடியின பெண் என்பதை காரணம் காட்டி குடியரசுத் தலைவர் தேர்தலை மத்திய பாஜக முன்னெடுப்பது சரியல்ல என்றும் எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சித்தன.
தவிர, இப்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்காக கவலைப்படும் எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் தேர்தலின்போது, பழங்குடியின பெண் ஒருவர் முதல்முறையாக உயர் பதவிக்கு போட்டியிடுகிறார் என்பதற்காக அவரை ஆதரிக்க முடியாது என்று மறுத்து விட்டன. அதனால் அதே முர்முவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் இன்று பரிந்து பேசுவதை ஏற்க முடியவில்லை.
அப்போது விசிக தலைவர் திருமாவளவன் கூறும்போது “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு அளிக்கிறது. பாரதிய ஜனதா கட்சி மற்றும் சங்பரிவார் அமைப்புகள் பழங்குடி சமூகத்தைச் சார்ந்த திரௌபதி முர்முவை வேட்பாளராக அறிவித்து விட்டு, நீங்கள் எல்லாம் சமூகநீதி பேசுகிறீர்கள்? பழங்குடி பெண்மணிக்கு ஏன் வாக்களிக்கத் தயங்குகிறீர்கள்? என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள்.
இது வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி அல்ல. குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான போட்டி. இது பாஜக அமைப்பின் கருத்துக்கு அல்லது கோட்பாட்டுக்கு எதிரான ஒரு போராட்டம்தான் எதிர்க்கட்சிகள் முன்னெடுத்து இருக்கிற போராட்டம்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக திரௌபதி முர்மு பதவி வகித்தபோது பழங்குடியின மக்களுக்கு எதிராக செயல்பட்டவர். அதனால் எங்களது ஆதரவு அவருக்கு கிடையாது” என்று காட்டமாக குறிப்பிட்டார்.
ஆனால் தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்றவுடன் திருமாவளவன் அப்படியே யூ டேர்ன் அடித்து முர்முவை வெகுவாக புகழ்ந்து தள்ளினார் என்பது வேறு விஷயம்.
“இப்படியெல்லாம் குடியரசுத் தலைவர் தேர்தலின்போது தொடர்ந்து கேலி பேசி வந்த திருமாவளவனுக்கு இப்போதுதான் திடீர் ஞானோதயம் தோன்றியது போல திரௌபதி முர்மு பழங்குடியின பெண் என்பதும் அவருடைய நினைவிற்கு வந்துள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அவர் மீது பாசம் பொங்கவும் செய்கிறது. இதன் மூலம்
நாம் முன்பு பேசியதையெல்லாம் தமிழக மக்கள் மறந்து போயிருப்பார்கள் என்று அவர் கருதுவது வெளிப்படையாகவே தெரிகிறது.
திருமாவளவன் அரசியலில் இப்படி இரட்டை வேடம் போடுவதை எப்போது, யாரிடம் கற்றுக் கொண்டார்?… அல்லது அவராகவே அனுபவத்தின் மூலம் கற்றுக் கொண்டாரா?…என்ற கேள்விகளும் எழுகின்றன.
பழங்குடியின பெண் என்பதை காரணம் காட்டி குடியரசுத் தலைவர் தேர்தலை மத்திய பாஜக முன்னெடுப்பது சரியல்ல என்றும் முர்மு ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின மக்களுக்கு எதிராக செயல்பட்டவர் என்றும் கடுமையாக விமர்சித்துவிட்டு அவர் உயர் பதவிக்கு வந்து விட்டதால் முன்பு போல் அவரை ஏளனமாக பேச முடியாது, மீறினால் அது தனது எம்பி பதவிக்கு வேட்டு வைத்து விடும் என்பதால் வேறு வழியின்றி இப்போது அடக்கி வாசிக்கிறார் என்பதும் தெளிவாக தெரிகிறது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
“தேசிய அரசியலில் மட்டுமல்ல தமிழகத்திலும் அவருடைய இரட்டை நிலைப்பாடு, தில்லாலங்கடி வேலைகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் பேசும் திமுக ஆட்சியில் நடந்ததை அவரால்
ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. அதை மாநில, தேசிய அளவில் பெரும் போராட்டமாக முன்னெடுக்க இயலாத நிலைக்கும் அவரை தள்ளிவிட்டுள்ளது.
இதனால் பட்டியலின மக்களின் தனிப்பெரும் தலைவர் திருமாவளவன்தான் என்று பெருமை பேசி வரும் விசிகவை அவருடைய சமூகத்தினரே நம்ப முடியாத நிலையும் ஏற்பட்டு விட்டது.
தவிர சமீப காலமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக பேசுவது போல அவர் நாடகம் ஆடி வருவதையும் காண முடிகிறது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறும் துணிச்சல் எடப்பாடி பழனிசாமியிடம்தான் இருக்கிறது, அதிமுகவில் ஆளுமை மிக்க தலைவராகவும் அவர் இருக்கிறார் என புகழ்ந்தும் தள்ளுகிறார்.
மதுவுக்கு எதிராக அதிமுக போராட்டங்களை முன்னெடுத்தால் அதில் பங்கேற்க விசிகவும் தயாராக இருக்கிறது என்று கடந்த வாரம் அதிரடியாக திருமாவளவன் அறிவித்தார். ஆனால் மிக அண்மையில், பூரண மதுவிலக்கிற்கு எதிராக அதிமுக போராட்டங்களை நடத்தினால் இணைந்து கொள்வோம் என்று கூடுதலாக
ஒரு இன்னொரு வார்த்தையை சேர்க்கிறார்.
விழுப்புரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 25 பேர் பலியானதால் அது போன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கில்தான் கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் விற்பனைக்கு எதிராக அதிமுக போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த போராட்டங்களில் விசிக கலந்து கொண்டால் திமுக கூட்டணியில் தனது கட்சியால் தொடர்ந்து நீடிக்க முடியாது என்பதை உணர்ந்துதான் தற்போது பூரண மதுவிலக்கு என்ற வார்த்தையை கூடுதல் நிபந்தனையாக திருமாவளவன் சேர்த்து இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஒருவேளை இதற்கும் எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்து விட்டால் அடுத்து தேசிய அளவில் பூரண மதுவிலக்கு கோரி அதிமுக போராட்டம் நடத்தினால் நாங்களும் அதில் கலந்து கொள்வோம் என்று திருமாவளவன் இன்னொரு நிபந்தனையை விதிக்கலாம்.
இதற்கும் தயார் என்று அதிமுக அறிவித்தால் உலகம் முழுவதும் பூரண மதுவிலக்கு போராட்டத்தை அதிமுக முன்னெடுத்தால் அதில் முதல் கட்சியாக எங்கள் விசிக இருக்கும் என்று திருமாவளவன் சொன்னாலும் சொல்லுவார்.
மதுவுக்கு எதிரான அதிமுகவின் போராட்டங்களில் பங்கேற்போம் என்று அறிவித்ததால் திமுக தலைமை அடைந்துள்ள கோபத்தில் இருந்து தப்பிப்பதற்காக திருமாவளவன் இப்படி நிபந்தனை விதித்துக் கொண்டே போகிறார்.
அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் 2024 தேர்தலில திமுக கூட்டணிக்கு தோல்வி நிச்சயம் என்பது அவருக்கு நன்றாகவே தெரிகிறது. அதனால்தான் திமுகவின் அஜெண்டாப் படி அவருடைய நோக்கமெல்லாம்
அதிமுகவும் பாஜகவும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி சேர்ந்து விடக்கூடாது என்பதாக இருக்கிறது.
எனவேதான் அரசியல் களத்தில்தான் ஒரு சிறந்த நடுநிலையாளன் என்பது போல திருமாவளவன் அவ்வப்போது தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆனால் அவருடைய இரட்டை வேடத்தையும், அவர் நடத்தும் திருவிளையாடல்களையும் யாரும் அவ்வளவு சுலபமாக நம்பி ஏமாந்து விட மாட்டார்கள் என்பதே எதார்த்தம்” என்று உண்மையை அந்த அரசியல் விமர்சகர்கள் உடைக்கிறார்கள்.