கவரைப்பேட்டையில் என்ஐஏ.. ரயிலை கவிழ்க்க சதியா?

Author: Hariharasudhan
12 அக்டோபர் 2024, 7:38 மணி
kavarapettai
Quick Share

கவரைபேட்டையில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது குறித்து, சம்பவ இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சென்னை: மைசூரில் இருந்து தார்பங்கா நோக்கி பாக்மதி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் நேற்று சென்னை அருகே சென்று கொண்டிருந்தது. சரியாக இரவு 08.35 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றபோது, லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது. மேலும் 4 பெட்டிகள் தடம் புரண்டன. பின்னர், இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் துவக்கினர். இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் மாற்று ரயில்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே, சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே துணை ஆணையர் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். இதில், சிக்னல் சரியாக கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் பாக்மதி எக்ஸ்பிரஸ் தவறான வழித்தடத்தில் சென்றதாகவும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சம்பவம் நடந்த இடத்தில் 500 டன் எடை கொண்ட இரண்டு ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்றன.

இதன் காரணமாக, நாளை காலை வழித்தடம் சரிசெய்யப்பட்டு, நாளை மாலை அல்லது திங்கள்கிழமை முதல் வழக்கமான ரயில் சேவை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூரில் இருந்து செல்லக்கூடிய பல ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

NIA

இந்த நிலையில், இன்று மாலை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள், அங்கிருந்த காவல்துறையினர், ரயில்வே அதிகாரிகள், மோப்பநாய் பிரிவினர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். முக்கியமாக, ரயில்வே தண்டவாளத்தில் சில போல்ட்டுகள் கழப்பட்ட நிலையில் இருந்ததாகவும் என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் ரயிலுக்கு வச்ச குறியில் பாக்மதி எக்ஸ்பிரஸ் சிக்கிக் கொண்டதா என்ற கோணத்திலும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.

இதையு படிங்க: ரயில் விபத்து… சிறுபிள்ளைத்தனமா பேசக்கூடாது : ராகுலுக்கு எல்.முருகன் எச்சரிக்கை!

மேலும், சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இருவரை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் கைது செய்திருந்தனர்.

இவ்வாறு தொடர்ந்து ரயில் விபத்துகள் தொடர்கதையாகி வருவதை மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் பதில் அளித்திருந்தனர்.

  • ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!
  • Views: - 122

    0

    0

    மறுமொழி இடவும்