PFI நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை.. முக்கிய நிர்வாகிகள் கைது… தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!!
Author: Babu Lakshmanan22 September 2022, 8:49 am
தமிழகம் உள்பட நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுதல், தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆள் சேர்த்தல் உள்ளிட்ட தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது போல் எஸ்டிபிஐ அமைப்பை சேர்ந்தவர்கள் வீடுகளிலும் ரெய்டு நடக்கிறது.
கேரளா, டெல்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ரெய்டு நடந்து வருகிறது.
அதேபோல, தமிழகத்தில் சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது.
கோவையில் கரும்பு கடையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பிற்காக சிஆர்பிஎஃப் போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.