நினைத்ததை செய்து முடித்த நித்தி… தனிநாடாக மாறியது கைலாஷா : குஷியில் நித்தி சீடர்கள்!!
Author: Babu Lakshmanan13 January 2023, 6:31 pm
சர்ச்சை சாமியார் நித்தியானாந்தாவின் கைலாசா நாட்டை தனிநாடாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு தலைமறைவான சாமியார் நித்தியானந்தா, இந்தியாவை விட்டு வெளியேறி, தீவு ஒன்றை வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தீவுக்கு கைலாஷா எனப் பெயரிட்டுள்ளதாகவும், இந்துக்களின் புனித பூமியாக அது இருக்கும் என்றும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடிக்கடி சமூகவலைதளங்களில் உரையாற்றும் நித்தியானந்தா, உண்மையில் புதிதாக ஒரு நாட்டை வாங்கிவிட்டாரா..? என்ற சந்தேகம் எழுந்து வருகிறது. அண்மையில், திருச்சி சூர்யா சிவா உள்ளிட்டோருக்கு ஆன்மிக விருதை கைலாஷா சார்பில் வழங்கியும் பரபரப்பை கிளப்பினார்.
மேலும், கைலாஷா நாட்டுக்கான ரூபாய் மற்றும் சின்னம் உள்ளிட்டவற்றை உருவாக்கும் பணியில் தீவிரப்படுத்தப்பட்டு வந்ததாக சொல்லப்பட்டது. இதனிடையே, தனி நாடு கோரி நித்தியானந்தா ஐ.நா சபையிடம் விண்ணப்பித்ததாகவும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் நெவார்க் நகரம் கைலாசாவை தனி நாடாக அங்கீகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கைலாசாவை இறையாண்மைப் பெற்ற நாடாக அங்கீகரித்துள்ள நெவார்க், இருதரப்பு மக்களின் மேம்பாட்டுக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி தொற்றுநோய், சிக்கலான மனநலப் பிரச்சனைகள், வன்முறை, வறுமை, கல்வியறிவின்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கு இரு நகரங்களும் சேர்ந்து தீர்வு காணும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நாவுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜயப்ரியா, நெவார்க் நகர மேயர் பராக்கா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்றும் தெரியவந்துள்ளது.