என்எல்சி விவகாரம்… விவசாயிகளுக்கு க்ரீன் சிக்னல் : பரபரப்பு உத்தரவு போட்ட நீதிமன்றம்!!
Author: Udayachandran RadhaKrishnan31 July 2023, 5:08 pm
என்எல்சி விவகாரம்… விவசாயிகளுக்கு க்ரீன் சிக்னல் : பரபரப்பு உத்தரவு போட்ட நீதிமன்றம்!!
என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில், கால்வாய் தோண்டும் பணிக்கு தடை விதிக்கவும், நிலத்தை ஒப்படைக்கவும் கோரிக்கை வைத்து உயர்நீதிமதின்றதில் தொடரப்பட்ட வழக்கில், இன்று அவசர வழக்காக விசாரிக்கப்பட்டதில், மனுதாரர் முருகன் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
நிலம் கையகப்படுத்தப்பட்டு இவ்வளவு ஆண்டுகளாகி, தற்போது அறுவடைக்கு காத்திருக்கும் சமயத்தில் கால்வாய் தோண்டுவது குறித்து இதற்கு தடைவிதிக்க கோரி வலியுறுத்தப்பட்டது. இதற்கு நீதிபதி, பயிர்களுக்கான இழப்பீடு குறித்து பிரமானபத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், என்எல்சிக்கும் உத்தரவிட்டார்.
மேலும் தமிழக அரசு தரப்பில் செப்டம்பர்-15க்குள் அறுவடையை முடித்து நிலத்தை திருப்பித்தரவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து மனுதாரருக்கு நீதிபதி, அறுவடை முடிந்த பின் நிலத்தை திருப்பித்தருவோம் என உத்திரவாதப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டபின்பு, நீதிபதி கையகப்படுத்தப்பட்ட பின்பு உங்களுக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பு வேலி கூட இதுவரை ஏன் அமைக்கவில்லை என என்எல்சி தரப்பிடம் கேள்வியெழுப்பினார்.
நிலத்தை சேதப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்றும், கால்வாய் தோண்டாவிட்டால் என்எல்சியிலிருந்து தண்ணீர் போக வழியில்லாமல் வெள்ளம் பாதிப்பு மற்றும் மின் உற்பத்தி போன்ற பாதிப்பும் ஏற்பட்டுவிடும் என என்எல்சி தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
இந்த வழக்கில் மனுதாரர் பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் தரப்பில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது, இதனால் ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் வழக்கின் தீர்ப்பு பொருந்தாது என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது, வழக்கு நாளை மறுதினம் ஒத்திவைக்கப்பட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.