போக்குவரத்து தொழிலாளர்கள் மீது அக்கறையே இல்ல.. திமுகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை அறிவித்த அதிமுக!!!
Author: Udayachandran RadhaKrishnan5 October 2023, 8:11 pm
போக்குவரத்து தொழிலாளர்கள் மீது அக்கறையே இல்ல.. திமுகவுக்கு எதிராக அதிமுக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
சென்னையில் அக்.9ம் தேதி அதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான அறிக்கையில், ‘உழைப்பவரே உயர்ந்தவர்’, ‘உழைப்பே உயர்வு தரும்’ என்ற பொன்மொழிகளை தாரக மந்திரமாகக் கொண்டு உழைத்து வரும் தொழிலாளர்கள், அனைத்து நிலைகளிலும் இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, அதிமுக ஆட்சிக் காலங்களில் தொழிலாளர்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தியும், எண்ணற்ற உதவிகளை செய்தும், தொழிலாளர்களுடைய நலன்கள் பேணி பாதுகாக்கப்பட்டு வந்தது.
திமுக அரசு பதவியேற்று 29 மாதங்கள் முடிவடைய உள்ள நிலையில், தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு சிறிதும் அக்கறை காட்டாமல் தொழிலாளர் விரோத அரசாக விளங்கி வருகிறது.
குறிப்பாக, போக்குவரத்துத் துறையில் எங்கெங்கெல்லாம் தனிப்பட்ட முறையில் பலன்பெற முடியும் என்பதை ஆராய்ந்து, அதற்கேற்ற வகையில் இந்த திமுக அரசு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
இந்த நிலையில், போக்குவரத்துக் தொழிலாளர்களின் 15-ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை துவங்கிடவும், போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கும் உள்நோக்கத்தோடு டெண்டர் முறையில் ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் நடவடிக்கையை கைவிடவும், 100 நாட்களுக்குள் வழங்குவதாக உறுதியளித்த பழைய ஓய்வூதியம், ஒய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி மற்றும் பணப் பயன்களை உடனடியாக வழங்கிடவும் திமுக அரசை வலியுறுத்தி, கழக அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது.
அதன்படி, சென்னை பல்லவன் இல்லம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் வரும் 9ம் தேதி 3 பிற்பகல் மணியளவில் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலும், கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன் முன்னிலையிலும் நடைபெறும்.
திமுக அரசை கண்டித்து நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக அனைத்து மண்டலங்களிலும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொழிலாளர்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.