வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எந்த அமைச்சரும் கண்டுகொள்ளவில்லை : நிவாரண உதவிகளை வழங்கிய இபிஎஸ் குற்றச்சாட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan6 August 2022, 5:27 pm
ஈரோடு மாவட்டம் பவானி குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். பின்னர், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள சமுதாய கூடங்களுக்கு சென்று நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது, கனமழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி கரையோரம் தாழ்வான பகுதியில் வசித்த மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் பகுதியில் 228 குடும்பங்களைச் சேர்ந்த 754 பேர் நான்கு முகாம்களிலும் பள்ளிப்பாளையத்தில் 328 வீடுகளைச் சேர்ந்த 850 பேர் நான்கு முகாம்களிலும் ஈரோடு மாவட்டம் பவானியில் 275 வீடுகளைச் சேர்ந்த சுமார் 800 பேர் 7 முகம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று கொடுமுடி பகுதியில் சுமார் 45 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த அளவிற்கு பெரும் வெள்ளம் காவிரியில் சென்ற போதிலும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களை பாதுகாக்கவில்லை. முகாம்களில் சரியான மருத்துவ வசதி கூட இல்லை.
இதேபோன்று அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் அருகே சுமார் 300 ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. 15 நாட்களாக காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஆனால் எந்த அமைச்சரும் மக்களை சந்தித்து உதவவில்லை. அதனால் மக்கள் இந்த அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
நான் இன்று இங்கு வருகை தருகிறேன், மக்களை சந்திப்பேன் என தெரிந்ததும் அவசர அவசரமாக சில அமைச்சர்கள் இங்கு வந்துள்ளனர். அதிமுக அரசு மக்களுக்கு துன்பம் ஏற்படும் போது அவர்களை மீட்டெடுத்து தேவையான உதவியை வழங்கியது. ஆனால் இந்த அரசு அதை செய்யவில்லை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் வீடுகளில் இருந்த அனைவருக்கும் உரிய இழப்பீட்டை அரசு போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும். இதுகுறித்து உடனே கணக்கெடுக்க வேண்டும். இதே போன்று பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்து அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டும் என அவர் கூறினார்