இனி ஒரு நிர்பயா தமிழகத்தில் உருவாகக்கூடாது : தஞ்சை பாலியல் சம்பவத்தை சுட்டிக் காட்டி இபிஎஸ் கண்டனம்!
Author: Udayachandran RadhaKrishnan6 September 2024, 12:35 pm
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் நடந்து சென்ற பெண் ஒருவர் லிப்ட் கொடுப்பது போல் பேசி இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
விடியா திமுக ஆட்சியில் பெண்கள் நடமாடவே முடியாத அளவுக்கு பாதுகாப்பு கொஞ்சமும் இல்லாத நிலை இருப்பதை நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்துள்ளேன்.
இதே தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாட்டில் கடந்த மாதம் சாலையில் நடந்துகொண்டிருந்த பெண் ஒருவர் 6 பேர் கொண்ட மர்மகும்பலால் பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டு, அப்பெண் உடனடியாக அதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்ற நிலையில், காவல்துறையும் மருத்துவத்துறையும் தன்னை அலைக் கழித்ததாக ஆங்கில நாளேட்டிற்கு பேட்டி அளித்துள்ளார்.
பாலியல் வழக்குகளை இவ்வளவு அலட்சியமாக கையாளும் அளவிற்கு நிர்வாகத்தை சீர்கெடுத்துள்ள விடியா திமுக முதல்வருக்கு கடும் கண்டனம்.
ஓரத்தநாடு வழக்கை துரிதமாக விசாரித்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருந்தால், இப்போது பூதலூர் வன்கொடுமையை தடுத்திருக்க முடியும்.
“சட்டம் தன்னை ஒன்றும் செய்யாது” என்று குற்றவாளிகள் துணிந்துவிட்டனரோ என்று நினைக்கும் அளவிற்கு விடியா திமுக ஆட்சியில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.
ஒரத்தநாடு, பூதலூர் வன்கொடுமை வழக்குகளின் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், இனி ஒரு நிர்பயா தமிழ்நாட்டில் உருவாகக் கூடாது என்ற நோக்கத்துடன் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.