அருந்ததியினர் ஓட்டு போட்டு யாரும் ஜெயிக்கப் போவதில்லை.. ஆ. ராசா சர்ச்சை பேச்சு : பாஜக கிடுக்குப்பிடி!!!

Author: Udayachandran RadhaKrishnan
5 August 2023, 6:16 pm

தி.மு.க-வின் வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறைக் கூட்டம் திருச்சியில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், தி.மு.க எம்.பி.யுமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அருந்ததியர் சமுதாய மக்களை மலம் அள்ளும் சிறுபான்மை சமுதாயம் என்றும், அவர்கள் ஓட்டுப்போட்டு யாரும் ஜெயிக்கப் போவதில்லை. ஆனாலும், அவர்களுக்கு மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது 3 சதவீத உள் ஒதுக்கீடு அளித்தார் என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய ஆ. ராசா, இதைச் சொல்லி விட்டு அவர்களை குறைத்து மதிப்பிடவில்லை என்று கூறி மன்னிப்பு கேட்பது போல பேசினார்.

ஆ.ராசாவின் இந்தப் பேச்சு அருந்ததியர் சமூக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆ. ராசாவுக்கு எதிராக போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அருந்ததியர் சமுதாய மக்களை மலம் அள்ளும் சிறுபான்மை சமுதாயம் என்றும், அவர்கள் ஓட்டுப்போட்டு யாரும் ஜெயிக்கப் போவதில்லை. ஆனாலும், அவர்களுக்கும் கருணாநிதி 3 சதவீத உள் ஒதுக்கீடு அளித்தார் என்ற ஆ. ராசாவின் பேச்சுக்கு, கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி சாதியை ஒழித்ததாக மார்தட்டிக் கொண்டு சாதி ரீதியாக அவமானப்படுத்துவது தான் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “அருந்ததியர் சமுதாய மக்களை மலம் அள்ளும் சிறுபான்மை சமூகம் என்றும், அவர்கள் ஓட்டுப் போட்டு யாரும் ஜெயிக்கப் போவதில்லை என்றாலும் அவர்களுக்கும் கருணாநிதி 3 சதவீத உள்ஒதுக்கீடு கொடுத்தார் என்று ஆ. ராசா அவர்கள் கூறியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

அருந்ததியர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி, அவர்களை புண்படுத்தியதற்கு ஆ. ராசா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதியை ஒழித்ததாக மார்தட்டிக் கொண்டு ஜாதி ரீதியாக அவமானப்படுத்துவது தான் திராவிட மாடலா?

தமிழகத்தின் முதலமைச்சர்களாக பணியாற்றிய ராஜாஜி, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரும் சிறுபான்மை சமுதாயங்களை சார்ந்தவர்கள் தான் என்பதை ஆ.ராசா உணர வேண்டும்.

சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் வழக்கத்தை ஆ.ராசா நிறுத்திக் கொள்ள வேண்டும். முதலமைச்சர் அவர்கள் ஆ. ராசாவின் மீது கடும் நடவடிக்கை எடுப்பாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி