கருணாநிதி சிலைக்கு இடம் கொடுக்க விருப்பமில்லை… ரொம்ப நெருக்கடி கொடுக்கறாங்க ; உரிமையாளர் சொன்ன பகீர் தகவல்

Author: Babu Lakshmanan
15 December 2023, 10:14 am

சேலம் – மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயில் பகுதியில் கருணாநிதி சிலை அமைக்க இடம் கொடுக்க விருப்பமில்லை என்று சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

1935ம் ஆண்டு சேலம் – ஆற்காடு சாலையில் டி.ஆர்.சுந்தரத்தால் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டது. இந்த ஸ்டுடியோவில் முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், ஜானகி உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர். சுமார் 47 ஆண்டு காலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் ஈடுபட்டு வந்தது.

பின்னர், 1982ல் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் இடத்தை வாங்கி, வீடுகளை கட்டி விற்பனை செய்தது வர்மா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கேட்டுக் கொண்டதன் பேரில், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் நுழைவு வாயில் மட்டும் தற்போது வரை பராமரிக்கப்பட்டு வருகிறது. நுழைவு வாயிலின் உள்ளே சிறிய காலியிடம் என 1,345 சதுர அடி இடம் மட்டுமே உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சேலம் வந்த முதலமைச்சர் ஸ்டாலின், நுழைவுவாயில் அருகே செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.

இதைத் தொடர்ந்து, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு அலங்கார வளைவில் இந்த இடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என்று பேனர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், நுழைவு வாயிலின் உள்பகுதியில் நெடுஞ்சாலைத் துறையால் முட்டுக்கல் நடப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

கருணாநிதி சிலை வைப்பதற்காக, அந்த இடத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியாக, அந்த இடத்தின் உரிமையாளருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் நெருக்கடி கொடுக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் குற்றம்சாட்டியிருந்தார்.

இது குறித்து வர்மா கன்ஸ்ட்ரக்சன் நிறுவன நிர்வாக இயக்குநர் விஜயவர்மன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது ;- மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயில் நினைவு வளைவு அருகே நின்று கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அதன்பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் என்னை சந்திக்க விரும்புவதாக தகவல் வந்தது. அதன்பேரில், என் மனைவியுடன் சென்று அவரை சந்தித்தேன்.

இந்த சந்திப்பின் போது, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலை பராமரித்து வருவதற்காக மகிழ்ச்சி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், விருப்பமிருந்தால் அந்த இடத்தை தர முடியுமா..? என்று கேட்டார். மேலும், கட்டாயம் எதுவுமில்லை என்று கண்ணியத்துடன் கூறிவிட்டார். நானும் குடும்பத்தினரை ஆலோசித்துவிட்டு கூறுவதாக சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டேன்.

பின்னர், மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயில் அருகே, முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை வைப்பதற்கு இடம் தேவைப்படுகிறது என்று கேட்டு, மாவட்ட அதிகாரிகள் எனக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனிடையே, நெடுஞ்சாலைத் துறையினர், ஏற்காடு சாலையின் எல்லையை அளவீடு செய்வதாகக் கூறி, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயில் இருக்கும் இடத்துக்குள் கடந்த 1-ம் தேதி முட்டுக்கல் நட்டுவைத்து, நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடம் என்று எச்சரிக்கை பேனர் வைத்துவிட்டனர்.

அந்த நிலம் எனக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. நீதி கேட்டு உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளேன். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட ஜெர்மன் நாட்டு இயந்திரங்களை பாதுகாத்து வருகிறோம். அவற்றைக் கொண்டு, சிறு அருங்காட்சியகம் அமைக்க விரும்புகிறோம். எனவே, இந்த இடத்தை கொடுக்க விரும்பவில்லை, என தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 880

    0

    0