கொஞ்சம் கூட அவகாசம் கொடுக்கல… என்ஐஏ சோதனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி அவசர முறையீடு..!!
Author: Babu Lakshmanan2 February 2024, 11:51 am
இதனிடையே, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளின் இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து நிதிபெற்றது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும், தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலை தொடர்ந்து இந்த ரெய்டு நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் நெருங்கிய நண்பரும், பிரபல யூடியூப்பருமான சாட்டை துரைமுருகனின் திருச்சி சண்முகா நகரில் உள்ள வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல, சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நாம் தமிழர் கட்சியின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதேவேளையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக் உள்பட பல்வேறு நிர்வாகிகளுக்கு நேரில் ஆஜராகுமாறு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் வழக்கறிஞர்கள் பாசறையின் சங்கர் மற்றும் சேவியர் பெலிக்ஸ் ஆகியோர் நீதிபதி ரமேஷ் முன்பு முறையிட்டுள்ளனர். அதாவது, NIA அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க அவகாசம் அளிக்காமல் உடனடியாக சோதனையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டினார். இந்த அவசர மனுவை பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.