ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவோம்… தோற்றாலும், ஜெயிச்சாலும் தனித்து தான் போட்டி ; சீமான் அறிவிப்பு
Author: Babu Lakshmanan29 January 2024, 9:25 am
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடி விட்டு கள்ளுக்கடைகளை (பனை – தென்னை பால்) திறப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காமராஜர் சிலை அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் முத்துக்குமார் 15வது ஆண்டு வீரவணக்கம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று முத்துக்குமார், பழனிபாபா திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
பின்னர் சீமான் பேசியதாவது :- கட்சி தொடங்கியது முதல் கூட்டணி இல்லை. தனித்து தான் எங்கள் பயணம். மக்களை நம்புகிறோம். எங்களை கைவிட மாட்டார்கள். தோற்றாலும், வெற்றி பெற்றாலும் தனித்து தான் என்று வரலாறு பேசும். நாம் தமிழர் கட்சிக்கு கூடும் கூட்டத்தை கண்டு மற்ற கட்சிகள் கலக்கம் கொள்கின்றனர்.
கூட்டுறவு வங்கியில் வைத்த நகைக் கடன் தள்ளுபடி செய்து விட்டார்களா?. ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி ஏன் திருச்செந்தூர் செல்லவில்லை. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகளை (பனை – தென்னை பால்) திறப்போம் – டாஸ்மாக் கடைகளை மூடுவோம், என கூறினார்.