இது வெட்கக்கேடு.. திமுக நிர்வாகத்தால் இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ; சீமான் கொந்தளிப்பு

Author: Babu Lakshmanan
16 January 2024, 1:25 pm

சென்னை ; அதிராம்பட்டினத்திலுள்ள இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் வளாகத்தைக் கைப்பற்றும் நிர்வாக முடிவைத் திரும்பப் பெறாவிட்டால், மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் அரை நூற்றாண்டாகக் கல்விப்பணியில் ஈடுபட்டு வரும் இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பெயர்ப்பலகையை ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் இடித்து, பள்ளியை மூடுவதற்கான முத்திரைக் குத்தப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இசுலாமியர்களின் பாதுகாவலரெனக் கூறிக்கொள்ளும் திமுகவின் ஆட்சியில், திமுகவின் நகராட்சி நிர்வாகத்தால் இசுலாமிய மக்களுக்கு விளைவிக்கப்பட்டிருக்கும் இக்கொடும் அநீதியானது வன்மையான கண்டனத்திற்குரியது.

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல ஏக்கர் நிலங்களை மீட்கக்கோரி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனைக் கண்டுகொள்ளாது காலங்கடத்தும் திமுக அரசானது, இமாம் ஷாஃபி பள்ளிக்கூடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே அக்கல்வி நிலையத்தை மூட முயற்சிப்பது வெளிப்படையான மோசடித்தனமாகும்.

ஐம்பதாண்டுகளாக இயங்கி வந்த இசுலாமியர்களின் கல்விக்கூடம் குறிவைக்கப்பட்டு, ஜே.சி.பி. இயந்திரம் மூலம் பெயர்ப்பலகைப் பெயர்க்கப்பட்டு, பள்ளியை மூடுவதற்கான வேலை நடக்கிறதென்றால் நடப்பது திமுகவின் ஆட்சியா? இல்லை! பாஜகவின் ஆட்சியா? இந்நிலத்தை ஆள்வது ஸ்டாலினா? இல்லை! யோகி ஆதித்யநாத்தா? எனும் கேள்விதான் எழுகிறது. வெட்கக்கேடு! இசுலாமியப் பெண் பிள்ளைகளின் கல்விக்காக உருவாக்கப்பட்டு, ஐம்பதாண்டு காலமாக மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தை மூடுவதற்கான நடவடிக்கைகள் எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல,

ஆகவே, அதிராம்பட்டினத்திலுள்ள இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் வளாகத்தைக் கைப்பற்றும் நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையைத் திரும்பப் பெற்று, அக்கல்விக்கூடம் தொடர்ந்து இயங்க வழிவகை செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். அதனைச் செய்ய மறுத்து, அக்கல்விக்கூடத்தை மூடுவதற்கு அரச நிர்வாகம் முற்படுமானால், மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து இச்சதிச்செயலை முறியடிப்போமென எச்சரிக்கை விடுக்கிறேன், என தெரிவித்துள்ளார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!